ஸ்ரீபிரியா கேட்ட பாடல்
எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில்பயணங்களில், தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன.
அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. அவருடைய நாவலான சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது. அதற்கு காரணம் எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல. நாதஸ்வர கலைஞர்களை பற்றியது என்பதும் தான். இருந்த போதும், இலையில் உள்ள பிடித்தமான பதார்த்தத்தை கடைசி வரை வைத்திருந்து, இறுதியில் இருக்கையில் சாய்ந்து, கண்ணைமூடி ரசித்து உண்போமே, அதுபோலவே இந்தப் புதினத்தை இவ்வளவு வருடங்களாக வைத்துவிட்டு, இப்போது தான் வாசிக்க ஆரம்பித்தேன்.
வாசிக்க ஆரம்பித்தவுடனே, அவர் எழுத்து வழக்கம் போலவே மிக இயல்பாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. வாயில் போட்டவுடன், உடனே உண்ணாமல் வாயின் ஒரு பக்கம் வைத்து நாவில் தடவி, ஊற வைத்து மெது மெதுவாக ரசித்து, ருசித்து, வெகு நேரம் உண்ணும் மிகச்சுவையான ஒரு நாவல் பழம் போல வரிகள் மனதில் ஊறிப் பெரும் சுவையை கொடுத்தன.
"வாசிப்பில் ஆழ்ந்து போய்விட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை அவன் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது.
தன்னிடமிருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை. அது ஒரு மணம். பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது. அதை மலரச்செய்வது வாசனையை கமழவிடுவதுதான் இசையா?"
எவ்வளவு அழகான வரிகள்! சிந்தித்துப் பார்த்தால், ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் ஆழ்ந்து, பெரும் மகிழ்ச்சியோடு ஆழ்ந்து போய்ச் செய்யும் எந்த விஷயமும், அவனுடைய அடையாளமாக, ஒரு தனித்தன்மையான மணமாகவே ஆகிவிடுகிறது இல்லையா? அது இசையாக இருந்தாலும் சரி, இயந்திரவியலாக இருந்தாலும் சரி.
இன்னும் சற்று உள்ளார்ந்து அவர் வரிகளைப் பற்றி சிந்தித்தால், இப்படி, எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி இதுபோல் வாசகரை லயித்துபோக வைத்துவிடும் வார்த்தைகளின் வித்தை தெரிந்தவர் என்று உணர்த்து கொள்ள முடியும்.
அதன்காரணமாகவே இப்படி தான் நேரடியாக அனுபவித்திராத ஒரு விஷயத்தைப் பற்றி அவர் எழுத முடிவெடுத்திருக்க வேண்டும். அப்படி எழுதுவதில் தவறேதும் இல்லை. அதுவும் எஸ் ரா போன்ற மிகச்சிறந்த புனைவிலக்கியவாதி சமூக விளிம்புநிலையில் இருக்கும் பாரம்பரிய நாதசுவர இசைக்கலைஞர்களைப் பற்றி எழுதுவது அந்த இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் குரலைப் பதிவு பண்ண ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், அப்படி ஒரு படைப்பை உருவாக்க அவருக்கு பெரும் ஆய்வு தேவைப் பட்டிருக்கும். அப்படி ஒரு ஆய்வை செய்து எழுதிய புத்தகமாக பொதுவெளியில் அடையாளம் காணப்பட்ட இந்த புத்தகத்துக்கு சாகித்திய அகாடமி விருது அதே காரணத்துக்காக வழங்கப் பட்டிருக்கலாம்.
ஆனால், அதில் தான் பிரச்சினை. பாரம்பரிய நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய நாவல் என்றும், பெரும் ஆய்விற்கு பிறகு எழுதப்பட்ட படைப்பு என்றும் பெரிதும் விதந்தோதி அவராலேயே குறிப்பிடப்பட்ட இந்த புதினம், அவர்களின் சமூக அமைப்பைப் பற்றிய அடிப்படை உண்மைகள் கூட புறந்தள்ளி வடிக்கப்பட்டிருப்பது பெரும் கொடுமை. பெரும் இசை ஆளுமைகளைப்பற்றிய வெறும் செவி வழிச் செய்திகளையும், குறிப்புகளையும் வைத்தே பின்னப்பட்டுள்ள புதினம் இது. அதனால், அது பல இடங்களில் பல்லிளித்துவிடுகிறது.
உதாரணத்துக்கு, அந்த புத்தகத்தில் உள்ள ஓரிரு இடங்களை மட்டும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
பாரம்பரிய இசைக்கலைஞர்கள் என்றவுடன், தமிழகத்தில் இசை வேளாளர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் எந்தக் குறிப்பும் நிறைவு பெறாது. ஆனால், இதில் அந்த சமூகத்தின் சிறு அடையாளம் கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியம். மேலும் பாரம்பரிய நாதஸ்வரக் கலைஞர்கள் என்னும் போது, அவர்களுக்கிடையே உள்ள சின்ன மேளம், பெரிய மேளம் என்ற சமூக அமைப்பையும் அதற்குள் இருக்கும் வரைமுறை மற்றும் பாகுபாடுகள் பற்றி பேசாமல் அவர்கள் அனுபவிக்கும் சாதிய அடக்குமுறைகளைப்பற்றி பேசுவதென்பது இயலாது. ஆனால், ஆரம்ப வரிகளில் இருந்தே, அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் எழுதியிருக்கிறார் என்பது பட்டவர்தனமாக தெரிகிறது. இந்தப் புரிதல் இல்லாமல் ஆய்வு செய்ததாக எப்படி நேர்மையுடன் குறிப்பிட முடியும் என்று தெரியவில்லை.
அதேபோல், தேவதாசிகளுக்கும், நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களுக்கிடையே உள்ள தொப்புள் கோடி உறவினைப் பற்றிய பிரக்ஞை இன்றி தட்டையான எழுத்திற்குப் பின் எப்படி அவரால் ஆய்வு செய்து எழுதியதாகக் குறிப்பிட முடியும்? தமிழகத்தில் எந்த விளிம்பு நிலை சமூகமும் அனுபவிக்கும் சாதிய அடக்குமுறை, தமிழக கிராமிய அன்றாட நிகழ்வுகள், ஆகியவற்றை வைத்து, தனது வழக்கமான வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி, மானே தேனே போட்டு எழுதியிருப்பது, அந்த சமூகத்திற்கு எந்த நியாயத்தையும் தராது என்பதோடு, அவருடைய அடிப்படை நேர்மையை / நேர்மையின்மையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
அவர், மிகப்பெரிய புனைவெழுத்துவாதி என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால், மிகப்பெரிய ஆய்வின் அடிப்படையிலான எழுத்து என்று பம்மாத்து பண்ணுவது ஏற்கப்பட முடியாது. அவர் குறிப்பிடும் கரிசல் காடும், அதன் பாரம்பரிய இசைக்கலைஞர்களும் தமிழகத்தில் தானே இருக்கின்றனர்? கள ஆய்வைவிடுங்கள். டாக்டர் சதாசிவன், தவேஷ் சோன்ஜி போன்ற ஆய்வாளர்கள் படைத்த முக்கியபடைப்புகள் இன்று பொது வெளியில் யாரும் வாசிக்கும் வகையிலுள்ளனவே? அதைப் படித்து எழுதும் அடிப்படை உழைப்போ அதற்கான குறைந்தபட்ச நேர்மையோ கூட எஸ் ரா விடம் இல்லை.
அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தில், மனமுடைந்த ஸ்ரீபிரியாவுக்காக சிவச்சந்திரன் பாடுவதாக “உறவுங்கள் தொடர்கதை” என்ற பாடல் இடம் பெரும். அருமையான வரிகள், மனதை வருடும் இசை, சுண்டியிழுக்கும் குரல், மனதை இதமாக்கும் முகபாவம் மற்றும் உடல்மொழி என்று சிவச்சந்திரன் காட்டும் பாவனைகளை, ஸ்ரீபிரியா நம்பி உருகுவது இயல்பானது. ஆனால், அதன் விளைவு ஸ்ரீபிரியாவுக்கு எந்த நன்மையையும் தராது. மாறாக சிவச்சந்திரனின் போலித்தனத்தால் அவர் தன்னம்பிக்கையை மேலும் உடைக்கத்தான் அது பயன்படும். இன்று தமிழ் இலக்கியப்பரப்பில், அப்படி பல எழுத்தாளர்கள் சிவச்சந்திரன்களாக உலாவி வருவதும், தமிழ் வாசகர்களை ஸ்ரீபிரியாக்களாக்கி வைத்திருப்பதும் தான் உச்சகட்ட சோகம்.
Comments
Post a Comment