மரபும் சிந்தனையும்

 ஒரு படைப்பு என்பது எதனால் வாசகனுக்கு நெருக்கமாகிறது? மொழியா? இல்லை கதைசொல்லும் பாங்கா? இல்லை கதையின் பாத்திரப்படைப்பா? இல்லை சொல்லவரும் கருத்தா?

வாசிப்பவரின் ரசனைக்கு நெருக்கமானவை மொழி, கதைசொல்லும் பாங்கு மற்றும் அதில் உலவவிடப்பட்ட பாத்திரங்கள் ஆகியவை. இவை அனைத்தையும் கொண்டு தான் படைப்பாளி தன் கருத்தை, அதை உருவாக்கிய சித்தாந்தத்தை, வாசகனிடம் கடத்துகிறான். பொதுவாக வாசகர்களின் ரசனைக்கு, அதன் தேடலுக்கு, ஒரு சிறந்த படைப்பாளி படையலிடும் விஷயங்கள் உச்சத்தையும் பிரமிப்பையும் அளிக்கும். அரிதாகவே சில வாசகர்களுக்கு மட்டும் சில நேரங்களில், அந்த அனுபவதில் திளைத்துக்கொண்திருக்கும் போதே அதைத்தாண்டி, படைப்பாளியின் அடிப்படைக் கருத்தாக்கம் என்ன என்ற கேள்வி எழும். அதுதான் படைப்பாளியும் அவன் வாசகனும் உரையாடும் கணம்.




S.L. பைரப்பா கன்னடத்தின் மிக முக்கியமான படைப்பாளி. அவருடைய பல படைப்புகள் பரந்த வாசிப்பும் கவனமும் பெற்றவை. அவருடைய இந்த "வம்ச விருட்சம்" கன்னட சாகித்ய அகாதெமி விருது பெற்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரிதும் வாசிக்கப்பட்டுள்ளது. அவருடைய பல நாவல்கள் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளதால், தமிழ் இலக்கிய பரப்புக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் தான் அவர். இருந்த போதும் அவருடைய இந்த முக்கிய படைப்பு தமிழில் இப்போது தான் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.




இதை மொழிபெயர்த்தவர் கே.நல்லதம்பி. எனக்கு மிகப் பிடித்தமான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். இவர் மொழிபெயர்த்த நேமி சந்திராவின் "யாத் வக்ஷேம்" 2022ம் வருடம் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதை வென்றது. அதுவும் கூட எனக்கு மிக நெருக்கமான படைப்பாகும் . அவருடைய வேறு பல மொழிபெயர்ப்புகளும் அவருடைய சொந்தப் படைப்பான அத்தர் என்ற சிறுகதைத் தொகுப்பும் நான் விரும்பி வாசித்தவை. மொழிபெயர்க்கும் போது மொழியின் எளிமையையும், மூலத்தின் அழகு மற்றும் சாரத்தையும் எந்த வித சமரசமும் செய்யாமல் மிக அழகான நேரடிப் படைப்புபோல வாசகனிடம் கொண்டு சேர்க்கும் வித்தை தெரிந்தவர்.




இந்தக் கதையில் குறிப்பிட வேண்டியது பாத்திரப் படைப்பும், அந்தப் பாத்திரங்களின் எல்லைகளை இனம்பிரித்துக்காட்டிய விதமும் தான். முக்கியமாக, ஸ்ரீனிவாச பண்டிதரின் அழுத்தமான பாத்திரப் படைப்பு. மற்ற ஒவ்வொரு பாத்திரங்களின் பார்வையில் அவரை ஒரு ஆதர்சமாகவே பைரப்பா படைத்துள்ளார்.
“எல்லாம் நம் விருப்பம் போல நடந்தால் அதை வாழ்க்கை என்று எதற்கு அழைப்பார்கள்?”
“நம்மை நாம் சிறப்பான உணர்வுகளுடன் அறத்திற்கு அர்ப்பணித்துவிட்டால், அறமே நம்மைக் கைப்பிடித்து வழிநடத்தும்.”

-------------------------------------

“ராயர் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அமைதி அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது. தாம் பேசிய பேச்சால் ராயருக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்பது பண்டிதருக்குப் புரிந்தது. "உங்கள் நிலைமையில் நான் இருந்தால் இப்படியே செய்வேன் என்பது எப்படிப் பொருந்தாதோ, அதுபோலவே அதன் எதிர்மறையும் பொருந்தாது. அவை எல்லாம் அவரவர் வாழ்க்கையின் பார்வையைப் பொறுத்தது. ஏதோ பாதையில் போவதால் வாழ்க்கையில் இரட்டை நிலை ஏற்படும். நடந்த பாதையிலிருந்து திரும்பி வர நினைத்தால் வேறொரு வகையில் இரட்டை நிலை ஏற்படலாம்"
சாமானிய வாழ்விலும், பண்டிதர் தன் நம்பிக்கையின் வழியே கண்டுகொண்ட அறத்தின் வரம்புகளுக்குள்ளே, தனக்கென்று ஒரு மதிப்பீடு வைத்துக்கொண்டு, அதனோடு எந்த சமரசமும் செய்யாமல் வாழ்வை வகுத்துக்கொள்பவர். மாறாக, உலகம் போற்றும் பெரும் இந்து மத ஆராய்ச்சியாளரான சதாசிவ ராயர், தன் அறிவின் வழியே அறத்தை புரிந்து கொண்டிருந்தாலும், தனது வாழ்வில் அந்த அறத்தின் வழி நடக்காமல் சமரசம் செய்து கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ராயரின் தம்பி ராஜாராவ் மேற்கத்திய தாக்கத்தினால், பழமையை விடுத்து, இயல்பான சுதந்திர சிந்தனையும் கொண்ட பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார் . பழமையின் மதிப்பீடுகளுக்கும், புதுமையின் சுதந்திரத்துக்கும் இடையே ஊசலாடும் ஒரு பெண்ணாக உலவும் காத்தியாயனி, பண்டிதரின் அறத்தின் மீதான மிரட்சியும், ராஜாராவ் வழியே கண்ட உணர்வின் இடையே தடுமாறும் ஒரு ஜீவன்.
இந்தக்கதையில் பல இடங்களில், உணர்வுகள் நேரடியாக எடுத்தாளப்படாமல் , மிக நளினமாகவும் , நுட்பமாகவும் வரிகளில் துலங்குவது மிக அழகு. இங்கேதான் பைரப்பாவின் இலக்கிய அழகும், அதை தமிழில் மிக நளினமாக வெளிப்படுத்திய நல்லதம்பியின் சாமர்த்தியமும் மின்னுகிறது.
“என்றும் புதுமையான, என்றும் வலிமையான இயற்கையைச் செயற்கைச் செயல்கள் கட்டிப்போடுவது அநீதி அல்லவா தேவகுரு? என் அடிப்படைக் குணமே இயங்கிக் கொண்டிருப்பது, மனதுக்கு நிறைவு தரும் வனச்செழிப்பு, கண்ணைக் கவரும் அழகான காட்சிகள், உயிரினங்களுக்கு உணவளிக்கும் என் விசாலப் பரப்பு இவற்றுக்கு எந்த நீதியும் கைம்பெண் என்ற பழியைச் சுமத்த முடியாது.'
இதுவரை காத்தியாயினி அந்த வார்த்தைகளின் பொருளை அன்று மட்டுமே புரிந்திருந்தாள். முன் நின்று அதன் உணர்வையும் அனுபவித்தாள். அவள் தேகம் முழுதும் அந்த உணர்வின் அனுபவத்தில் சிலிர்த்தது."
--------------------
"மீண்டும் மேகங்கள் ஒன்றுசேர்ந்தன. ஆனால் இப்போது கூடும் மேகம் புதிதல்ல. முதலில் விழுந்து மீதமிருப்பதே புதிதாகத் திண்மமானது. இப்போது முன்பு இருந்தது போல தாங்க முடியாத வெப்பமல்ல. மழையும் அமைதியாகப் பொழியத் தொடங்கியது. 'சோ' என்று விடாமல் வெறி வேகமில்லாமல் அமைதியாகப் பொழிந்துகொண்டிருந்த மழையை பூமியும் அமைதியாக வரவேற்றது. வானில் கருந்திரைகள் இருக்கவில்லை. மழையைப் பருகித் தணிந்திருந்த பூமியின் முகம் புன்னகைத்தது. மீண்டும் வெயில் தெரிந்தது. மேகம் மறைந்திருந்தது.”
பண்டிதரின் பார்வையில் குடும்பம், வம்சம் இவற்றின் ஆதாரமாக பிறப்பின் அடிப்படையிலான சிறப்பு முன்வைக்கப்படுவது மட்டுமல்லாமல், அதற்கு பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்றும் முன்வைக்கப்படுகிறது. இதுதான் கதையின் சிக்கலான முடிச்சு உருவாகும் இடம். உண்மையில் இது அனைத்து மதங்களின் அடிப்படை நெறிகளின் ஆதாரம் தான்.
ஒப்பீட்டளவில் வெவேறு கால கட்டத்தில் பண்டிதர், மற்றும் ராயர் லௌகீக வாழ்வின் சோதனையான கட்டத்தை எதிர்கொள்வதையும் அதிலிருந்து பண்டிதர் மட்டும் வழுக்கி விழாமல் கடந்து விடுவதையும், ராயர் உலகம் போற்றும் அறிஞராக இருந்த போதும் வழுக்கி விழுவதும், இருவரும் போற்றும் அறத்தினடிப்படியிலான வாழ்வை வைத்து பைரப்பா பிரித்துக்காட்டுகிறார்.
மேலும், அறத்தை அறிந்த ராயரும் , புதுமையை போற்றும் ராஜாவும் கூட தங்களை நம்பி வந்த பெண்களின் சோதனையான கட்டத்தில் அவர்களைக் கைவிடுவதும், மாறாக அந்தப் பெண்களின் மீட்சி பண்டிதர் வழியே நிகழ்வதும் ஒரு நுணுக்கமான ஒப்பீடு. அதன் வழியே பைரப்பா, தான் நம்பும் இந்து தர்மம் அல்லது இந்து அறத்தின் மேன்மையை மிக அழுத்தமாக, அதே சமயம், மிக நுட்பமாக முன்னிறுத்துகிறார்.

Comments

Popular posts from this blog

Vistas of Evolution

இலக்கியம் - சமர்

The art of silencing the Voices from the past