விளிம்பில் நடக்கும் வரிகள்

 என் சமீபத்திய பயணம் ஒன்றில், ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் தான் ராபர்ட் சீதாலர் ( Robert Seethaler) என்னும் ஆஸ்திரிய எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார். நான் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது, அந்த நகரின் புத்தகக்கடைக்கு சென்று அங்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களை புரட்டி, புதிதான வாசிப்புக்கு அச்சாரம் போடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அப்படித்தான் அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பை அங்கே கண்டெடுத்தேன். அப்படிப் புரட்டிய புத்தகத்தில், ​​அதன் எளிமையான வரிகளும் அதன் உருவகங்களும் மனதிற்குள் ஆணியடித்து சட்டமாகவே அமர்ந்துவிட்டன.









வேறு ஒரு நெடும் புதினத்தின் வாசிப்பின் இடையே, இளைப்பாற, வேறொரு புத்தகத்தை தேடியபோது, கிண்டிலில் வாங்கி வைத்திருந்த அவரது "தி டொபாகோனிஸ்ட்" ( The Tobacconist / Der Trafikant ) என்ற புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். தொடக்கத்திலிருந்தே, அந்த எளிய வரிகள், அவை கண்முன் நிறுத்திய காட்சிகள் என்று அனைத்தும் பட்டென்று மனதில் சென்று ஒட்டிக்கொண்டன. அதற்குக் காரணம், சார்லோட் காலின்ஸ் (Charlotte Collins) மொழிபெயர்ப்பு.




மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிறந்த மேடைக் கச்சேரியில், மையப் பாடகரின் குரலுக்கும் இசைக்கும், இணைந்ததாய், இசைவாய், அந்தக் குரலை மீறாமல், கச்சேரியை கரைசேர்க்கும் பக்க வாத்தியம் போல் இருக்கவேண்டும். பல நேரங்களில் மூலத்தின் வீச்சை மீறி, மொழிபெயர்ப்பாளரின் மொழித்திறனையும், மேதாவித்தனத்தையும் வெளிப்படுத்தும் போக்கு தெரியும். அப்படித்தெரியும் போது, வாசிப்பு ஒரு பெரும் பிரயத்தனமாகவும், கசப்பானதாகவும் மாறிவிடுகிறது. இந்த புத்தகத்தில், காலின்ஸின் மொழிபெயர்ப்பு, அருமையாக இணையும் பக்க வாத்தியம் போல், மெலிதாக முகத்தில் வந்து வீசும் தென்றல் போல, மிகவும் மென்மையாக வீசுகிறது. சீத்தாலரின் கதையிலிருந்து வெளிப்படும் நுணுக்கங்களையும் இது நேரடியாக நமக்கு கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது.
பெரும் போராட்டம் இல்லாமல் இலகுவான மொழியில், முற்றிலும் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் நுணுக்கமான சர்வதேச இலக்கியப் படைப்பைப் படிக்க விரும்பினால், இந்தப் புத்தகம் உங்களுக்கானது. இந்தக் கதை, ஆஸ்திரியாவின் சால்ஸ்கமர்குட் பகுதியைச் சேர்ந்த பதின்ம வயதான எளிய, இளம் கிராமத்து இளைஞனின் முதிர்ச்சி அடைதலும், ஆஸ்திரியாவின் நாஜிகள் முன்னணிக்கு வரும் காலகட்டமும் ஒரு புள்ளியில் இணைய, வியன்னாவில் நடக்கின்றது. குறிப்பாக இந்தக் கதை, 1938 ஆம் ஆண்டு வாக்கில், ஹிட்லரின் ஜேர்மனிய பேரரசில் ஆஸ்திரியா இணைத்துக்கொள்ளப்படும் துரதிர்ஷ்டவசமான காலகட்டத்தில் நடக்கிறது.
ஃபிரான்ஸ் ஹுச்சல் எனப்படும் அந்த இளைஞனுக்கும், அவன் பணிபுரியும் கடைக்கு வந்து சுருட்டு வாங்கிச்செல்லும் மனோவியல் நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்டுக்கும் ஏற்படும் மெல்லிய நட்பின் இழையின் வழியே நகர்ந்து செல்லும் கதை, ஹிட்லரின் வருகைக்குப் பின்னான ஆஸ்திரிய சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும், நெருக்கடிகளும் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தப்படுகிறது.
சிக்மண்ட் ஃபிராய்டின் சித்தரிப்பு அந்தக் கால யூதர்களின் மீதான அடக்குமுறை பற்றிய மிக நுட்பமான உருவகமாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆஸ்திரியரான சிக்மண்ட் ஃபிராய்ட், ஒரு உலகப்புகழ்பெற்ற உளவியல் நிபுணராக இருந்தும், நாஜிகளினால் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தது. அவருடைய அறிவுலக வாரிசும், அவருடைய பாசத்துக்குரிய செல்ல மகளுமான, அன்னா, அதன் உச்சமாக விசாரணைக்கு உட்பட்டதும், அதன் தொடர்ச்சியாக ஃபிராயிடின் குடும்பத்தினர் நிரந்தரமாக ஆஸ்திரியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
மேலோட்டமாக வாசித்தால், நாஜிகள் நிகழ்த்திய ஹோலோகாஸ்ட் படுகொலைகளைப் பற்றி எழுதப்பட்ட பல்லாயிரம் புத்தகங்களில் ஒன்றாக கடந்து போகமுடியும். முதலில் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இன்றும் அதை வைத்து பின்னப்பட்ட கதைகள் மேற்குலகின் யூதர்கள் பற்றிய குற்றவுணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு ஜியோனிஸ்ட்டுகளின் இஸ்ரேலின் தோற்றம் மற்றும் இருப்பைப்பற்றிய பற்றிய நியாயப்படுத்தலின் அடிப்படையாக இருக்கின்றன. ஆனால் கூர்ந்து வாசித்தால் தான், இந்தப் புத்தகம் நிச்சயமாக அது இல்லை எனப் புரியும்!
இதில் பல இடங்களில் காணப்படும் உருவகங்கள் மிக இலக்கிய அழகு கொண்டவை. ஃபிரான்ஸின் முதல் காதல் சட்டென்று எழும்பி, பிறகு கரைந்துபோவதை ஒரு விட்டில் பூச்சியின் பயணம் அவன் கையில் கருகி விழுந்து முடிவதோடு ஒப்பிடுவது, அவன் தன் காதலியின் மறு பக்கத்தை அறிந்தவுடன் எழும் உணர்வுகளை நீருக்கடியில் அவன் சிறுவனாக கண்ட செத்த எலியின் காட்சியோடு இணைத்துப்பார்ப்பது, இறுதியாக நாஜிக்களின் ஸ்வஸ்திகா கொடிக்கு பதிலாக அவர்களால் கொல்லப்பட்ட முடமான பிரான்சின் முதலாளியின் கால்சட்டை குற்றம் சாட்டும் விரல்களைப் போல் பறப்பது என்று ஒவ்வொரு இடத்திலும் சீத்தாலரின் அழகியல் நம்மை கவர்கிறது.
இது போன்ற அதன் அழகிய உருவகங்கள், காட்சிப்படுத்துதல்கள் ஆகியவற்றைத் தாண்டி ஏதும் புரிதல் இல்லாமலே வாசித்து முடித்தேன். இருந்த போதும், புத்தகத்தை வாசித்து முடித்த ஓரிரு நாட்களின் பின்னும், ஏதோ ஒரு நெருடல், பற்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட உணவுத் துகள் போல தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. ஏதோ ஒரு அடிப்படையான விஷயத்தை நான் தவறவிட்டதாக எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.
சற்று ஆழ்ந்து யோசித்த பின் சீத்தாலர் உண்மையில் என்ன சொல்லவருகிறார் என மனதில் மின்னலடித்தது. மிகவும் நுட்பமாக, கத்திமுனையில் நடப்பதைப்போல அவர் கருத்தை விரித்திருக்கிறார். கொஞ்சம் தவறினாலும், anti-Semitic அல்லது யூத எதிர்ப்பு என்ற முத்திரை அவர்மீது ஜியோனிஸ்ட்டுகளால் சுமத்தப்பட்டிருக்கும். அப்படி சுமத்தப்படாமல் இருக்க மிக நுட்பமாக தன் கருத்தை அவர் கதையாடலில் கொண்டுவந்திருக்கிறார்.
ஹோலோகாஸ்ட் என்பது மனித இனத்தின் மீதான ஒரு பேரழிவு. அதை யூதர்களின் பிரச்சினையாக மட்டும் சுருக்கிவிட முடியாது. யூதவுலகின் மதிப்பீட்டின்படி நாஜி படுகொலை புள்ளிவிவரங்கள், சுமார் 6-8 மில்லியன் யூதர்கள் ( உலகம் முழுவதும் மதிப்பிடப்பட்ட அன்றைய மொத்த யூத மக்கள் தொகையில் 2/3 பகுதி ) கொல்லப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், ஹோலோகாஸ்ட்டினால் ஏற்பட்ட மொத்த மனித இறப்புகள், குறைந்த அளவு மதிப்பீட்டின்படியே 11-17 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது! இதில் போர் தொடர்பான நடவடிக்கைகளினால் இழந்த உயிர்களையும், தடம் புரண்ட வாழ்வுகளையும் நான் (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) சேர்க்கவில்லை. இந்த எண்ணிக்கைகளை நான் அங்கீகரிக்கப்படட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.
எனவே ஹோலோகாஸ்ட் என்பது யூதர்களின் பேரழிவாக மட்டுமல்லாமல், முழு மனிதகுலத்தின் பேரழிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலான இலக்கிய புனைகதைகள் யூத அழிவை மட்டுமே முன்வைக்கின்றன. ஆனால், இறுதியாக வதை முகாம்களில் தள்ளப்பட்டு, ஒருபோதும் உலகத்தை திரும்பக் காணாத யூதர் அல்லாதவர்கள், யூத ஆதரவாளர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்கள், சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் மற்றும் ஹோலோகாஸ்ட் நடவடிக்கைகளால் மறைமுகமாக வாழ்வியல் இழந்து பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிப் பேசும் படைப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன. இந்தப் படைப்பின் வழியாக சீத்தாலர் எழுப்பும் கருத்தும் அதுதான். இந்தப் புரிதல் குறைபாடுகள் தான் மத்திய ஆசியாவில் இன்று வரை ஏற்படும் பிரச்சனைகளின் மூலப்புள்ளி எனவும் தோன்றுகிறது. இறுதி அணுயுத்தம் அல்லது மூன்றாம் உலக யுத்தம் என்று விவரிக்கப்பட்ட போரின் விளிம்பு வரை சென்று வந்த சமீப கால யுத்த நகர்வுகளுக்கும் இந்தப் புரிதல் குறைபாடுதான் காரணம்.












இந்தப் படைப்பு, 2018ல் The Tobacconist என்ற அதே பெயரில் திரைப்படமாக வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிக்மண்ட் பிராயிட்டாக நடித்திருக்கும், புரூனோ கன்ஸ் என்ற சுவிஸ் - ஜெர்மன் நடிகர் தான் 2004ல் Downfall என்ற ஹிட்லரின் இறுதி காலத்தைப் பற்றிய படத்தில் ஹிட்லராக நடித்தவர் என்பது ஒரு சுவாரசியமான நகை முரண்!

Comments

Popular posts from this blog

Vistas of Evolution

இலக்கியம் - சமர்

The art of silencing the Voices from the past