புலிகளின் காலங்கள்
ஒரு அடர் கானகத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கிறேன். இதுவரை நான் பார்த்தேயிராத தாய்லாந்தின் கிழக்குப் பகுதி காட்டிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கிறேன். எப்படி நேர்ந்தது இது? ஒரு தொழில் முறை பயணமாக சென்றபோது கண்டெடுத்த ஒரு புத்தகத்திலிருந்து தான் இந்த நிகழ்ந்திருக்க வேண்டும்.
வழக்கமாக செய்வது போலவே இந்த முறையும் அந்த ஊரில் உள்ள ஒரு புத்தகக்கடைக்கு சென்று அங்கே என்ன புத்தகம் இப்போது மிகவும் வாசிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்று அறியும் ஆவலோடு சென்றேன். அப்போது அங்கிருந்த கடைச் சிப்பந்தி எனக்காக தேர்ந்தெடுத்துக் கொடுத்த புத்தகம் தான் இது.
இதை எழுதியவர் சனே சங்சுக் (Saneh Sangsuk) எனப்படும் ஒரு தாய்லாந்து எழுத்தாளர். தாய்லந்தின் குறிப்பிடத்தக்க முன்னணி புனைவு எழுத்தாளர் இவர். அந்த நிலத்தின் முக்கிய கதை சொல்லியான சனே, அவர்களின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் குறியீடாக வைத்து தன் எழுத்துகளில் மாயவித்தையை நிகழ்த்திக் காட்டும் வித்தைக்காரர். தற்கால தாய் இலக்கிய பரப்பிலும், உலக இலக்கிய பரப்பிலும் பல விருதுகளைப் பெற்றவர். ஆனாலும் அவருடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வருவது இப்போதுதான்.
இந்த புத்தகம் தாய்லாந்து மொழியிலிருந்து மூய் பூபோக்சகுல் ( Mui Poopoksakul - சரியாக உச்சரித்திருக்கிறேனா?! ) என்ற மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூய், பெர்லினில் வாழும் சட்டத்தரணி / வழக்கறிஞர். தாய்லாந்தின் முக்கிய சமகால படைப்பாளிகளின் தேர்ந்தெடுத்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருபவர். தாய் இலக்கியத்துக்கும், உலகளாவிய ஆங்கில வாசகர்களுக்கும் பெரும் கொடையை அளித்துவருபவர். இவருடைய மொழிபெயர்ப்பு, உணர்வுகளை உறுத்தாமல் கடத்துகிறது. பிரிட்டிஷ் ஆங்கில வாடை அளித்தாலும், வாசிப்பதற்கு மிக இலகுவாகவும், வசதியாகவும் அமைந்துள்ளது.
சனே எழுதி "The Understory" என்ற பெயரில் சுமார் 200 பக்கங்களுடன் வெளிவந்துள்ள புத்தகம் வாசிக்க ஆரம்பித்தவுடன் நம்மை வேகமாக உள்ளிழுத்துக் கொள்கிறது. ஆனால் இது வேகமாக வாசித்துக் கடந்துவிடும் ரகமல்ல. கதை, கதைக்குள் கதை, என்று பல தளங்களில் பயணிக்கும் புனைவு இது.
கதை நடப்பது, 1960களின், காட்டிலிருந்து வேளாண்நிலங்கள் வெளிவந்த தாய்லாந்து. வேளாண்குடிகளில் இருந்து மக்கள் தொழிலாளர்களாக மாறிவரும் காலகட்டமும் கூட. தாய் சமூகம், வேட்டையாடிகளாகவும், அதிலிருந்து வந்த வேளாண் குடிகளாகவும், தொழில்புரட்சியின் நகரமயமாக்களில் அமிழ்ந்து காணாமல் போய்விடுபவர்களாகவும், கலவையாக இருந்த காலகட்டமும் இதுதான். மாற்றங்கள் மெதுவாக சென்று சேரும், கிழக்குப்பகுதியின் காடோடு ஒன்றிய பிரேக்நாம்டங் என்ற கிராமத்தில் வாழும் லுவாங் பாவ் டியன் என்ற புத்த பிக்குத்தான் கதையின் முக்கிய புள்ளி. அந்த ஊரில் இருந்து மாற்றங்களை கண்டு அதனைக்கடந்து, ஒரு கதைசொல்லியாக மாறியவர்.
முதலில் கதைசொல்லியின், கதை சொல்லும் கலைக்குள், அதன் இன்பத்துக்குள் கைபிடித்து அழைத்துச்செல்லும் புனைவு, டியனுடன் நம்மை நெருக்கமாகப் பிணைத்துவிடுகிறது. பிறகு, அதைக்கொண்டு நெருக்கமான கதைசொல்லி, மெதுவாக நம்மை காட்டோடு அமிழ்த்து அப்படியே தன்னுடைய கதைக்குள் புகுத்திவிடுகிறார் . ஆரம்பத்தில் மிக மென்மையாக, கவிதையாக காட்டின் அழகை படம் பிடிக்கும் எழுத்து, மெது மெதுவாக காட்டில் புலி வருவது போல் இருளையும் அழைத்து வருகிறது; பின் புலியும் வருகிறது.
மாற்றங்கள் நிகழும் காலக்கட்டத்தில் அவருடைய வாழ்வியல் போராட்டங்களை, அதன் வழியே அந்த காலகட்டத்தின் சமூகம் மற்றும் நிலப்பரப்பையும் நமக்கு மெதுவாக கடை விரித்து காட்டுகிறார். ஆரம்பத்தில் கதை சொல்லியான டியன் மீது ஒருவித வியப்புடன் விரியும் நம் பார்வை, கதைக்குள் சென்றவுடன் அவரோடு சேர்ந்து அழுகிறது, சிரிக்கிறது, பிறகு நடுநடுங்குகிறது. ஒரு காட்டின் பிரம்மாண்டத்தையும் அதன் பயங்கரத்தையும் நம் கண் முன்னே நிறுத்துகிறது.
தாய் கலாச்சாரத்தில் புலிகளும், மயில்களும், பாம்புகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அவர்களின் பாரம்பரிய கதை நடனங்களில் இவற்றை அதிகம் பார்க்கலாம். அதே முறையில்தான் சனே இவற்றை தன கதையில் பயன்படுத்துகிறார் எனத்தோன்றுகிறது.
ஆரம்பத்தில் மிக இனிமையாகச் செல்லும் டியனின் ஆரம்பகால வாழ்க்கை, திடீரென ஒரு புலியின் வரவால் தடம் மாறி போகிறது. அதன்பின் தாயற்ற ஒரு சிறுவனாக வாழும் அவர் பிறகு அந்த புலியோடு போராட்டம் நிகழ்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
இதில் புலியும், கதை சொல்லியும், அவர் தந்தையும் பெரும் குறியீடுகள். இதில் அவர் தந்தை வேட்டையாடியாகவும் விவசாயத்தில் நாட்டம் இல்லாதவராகவும் காட்டப்படுவதும் குறியீடு தான். விவசாயத்தில் நாட்டமுடைய அவர் மனைவி அதற்குப் பிறகான வேளாண் சமூகத்தில் குறியீடு. இதற்கு நடுவில் இரண்டும் கெட்ட நிலையில் கிடந்து தள்ளாடும் டியனின் நிலை அக்கால சமூகத்தில் நிலையை சுட்டுவதாக இருக்கிறது. அதற்கு பின்னான காலகட்டத்தின் அதிர்வுகளை குறிப்பதுதான் புலி எனத்தோன்றுகிறது.
மொத்தத்தில் பிரமிக்கவைக்கும் வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் படைப்பு இது.



Comments
Post a Comment