கவனமும் புரிதலும்
ஒரு அதிகாலை புதிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மைசூர் பயணம். இடையில் சிற்றுண்டிக்காக, பெங்களூரின் பெயர்பெற்ற சைவ உணவகத்தின் கிளையில் நிறுத்தினோம். அது பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்பெற்ற ஊருக்கருகில் உள்ளது என்றபோதும், அங்கே வருபவர்கள் அனைவரும் அந்த நெடுஞ்சாலை வழி செல்லும் பயணிகளாகத்தான் இருப்பர். உணவை சொல்லிவிட்டு, காத்திருக்கும் போது அருகில் உள்ள மேசைகளில் தென்படும் முகங்களை காண்பதும், அதைவிட அவர்கள் உண்ணும் உணவுத் தட்டை கவனிப்பதும் மிக சுவாரசியம். அதையும் மீறி அது, காத்திருக்கும் நம் வயிற்றுக்கும் சற்று முன்னோட்டமாகவும் இருக்கும் என்பது ஐதீக நம்பிக்கை. அப்படி நாங்கள் உணவுக்காக காத்திருந்த போது, அருகில் ஒரு வயதான பெண்மணி பளிச்சென்று கண்ணில்பட்டார். பார்த்தவுடன் பெங்களூரின் படித்த Progressive என்று பறையடித்துக்கொள்ளும் தோற்றம் மற்றும் உடை. பக்கத்தில் தன்னோடு வந்த பெண்மணியோடு சிரித்துப் பேசிக்கொண்டே உணவுண்டு கொண்டிருந்தார். உணவு உண்டபின் உணவகத்தின் பின்னே இருந்த பொது கழிப்பகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலில் நானும் எங்கள் செல்வனும் சென்றுவிட்டு பைகளை ஏந்திக்கொண்டு என் மனைவி வருவதற்கு...