கவனமும் புரிதலும்

ஒரு அதிகாலை புதிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மைசூர் பயணம். இடையில் சிற்றுண்டிக்காக, பெங்களூரின் பெயர்பெற்ற சைவ உணவகத்தின் கிளையில் நிறுத்தினோம். அது பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்பெற்ற ஊருக்கருகில் உள்ளது என்றபோதும், அங்கே வருபவர்கள் அனைவரும் அந்த நெடுஞ்சாலை வழி செல்லும் பயணிகளாகத்தான் இருப்பர். உணவை சொல்லிவிட்டு, காத்திருக்கும் போது அருகில் உள்ள மேசைகளில் தென்படும் முகங்களை காண்பதும், அதைவிட அவர்கள் உண்ணும் உணவுத் தட்டை கவனிப்பதும் மிக சுவாரசியம். அதையும் மீறி அது, காத்திருக்கும் நம் வயிற்றுக்கும் சற்று முன்னோட்டமாகவும் இருக்கும் என்பது ஐதீக நம்பிக்கை.




அப்படி நாங்கள் உணவுக்காக காத்திருந்த போது, அருகில் ஒரு வயதான பெண்மணி பளிச்சென்று கண்ணில்பட்டார். பார்த்தவுடன் பெங்களூரின் படித்த Progressive என்று பறையடித்துக்கொள்ளும் தோற்றம் மற்றும் உடை. பக்கத்தில் தன்னோடு வந்த பெண்மணியோடு சிரித்துப் பேசிக்கொண்டே உணவுண்டு கொண்டிருந்தார்.

உணவு உண்டபின் உணவகத்தின் பின்னே இருந்த பொது கழிப்பகத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலில் நானும் எங்கள் செல்வனும் சென்றுவிட்டு பைகளை ஏந்திக்கொண்டு என் மனைவி வருவதற்கு காத்துக்கொண்டு ஓரமாக நின்றிருந்தோம். உணவகத்துக்குச் சேர்ந்த அந்த கழிப்பகம், உணவக நிர்வாகத்தால் மிக சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. அதைவிட, அந்த இளங்காலை வேளையில் அங்கிருந்த, தூய்மைப் பணியாளர்கள், மற்றும் மேற்பார்வைப் பணியாளர்கள் அனைவரும் சுத்தமாக பளிச்சென்ற சீருடைகளில் சுறுசுறுப்பாக தென்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகாமை கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்று புரிந்தது.

அப்போது ஒரு கார், மெதுவாக பின் வாயில் வழியே வந்து கழிவறை வாசலில் நெருக்கமாக நின்றது. அதிலிருந்து நேரடியாக வாயிலில் மெதுவாக இறங்கியது அந்த progressive பெண்மணி. உள்ளே செல்லும் படிகளில் தடுமாறியவாறே ஏறியவருக்கு உதவ அங்கே இருந்த சீருடை அணிந்த பெண் பணியாளர் ஒருவர் விரைந்ததை கவனித்தாலும், அருகில் இருந்த குளம் மற்றும் அதன் பறவைகளைப் சுட்டி மைந்தன் பேச ஆரம்பித்ததில் அதில் கவனம் சென்றது.

சிலநிமிடங்களில் வெளியே வந்த மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதைத்தொடர்ந்த உரையாடல்:

“நான் உள்ள போகும் போது உள்ள ஒரு வயசான அம்மா நுழைஞ்சாங்க பாத்திங்களா?”

“ஆமாம், வயசானவங்க பாவம், படியேறவே தடுமாறினாங்களே… ”

“ஆமாம்… அந்த அம்மாவுக்கு உள்ள போயி உக்காரறதுக்கு யாராவது உதவி செய்ய வேண்டியதா இருந்தது…”

“பாவம்…. நல்லவேளை, அதுதான் ஒரு பணியாளர் உள்ள போனாங்களே, அவங்க உதவி செஞ்சிருப்பாங்களே..”

உடனே மனைவின் முகம் கோபத்தில் கோபம் ஒரு மாற்று கூடியது.

“ பாவம் என்ன பாவம்… அந்தம்மா பண்ணுன காரியத்துக்கு!...”

“ஏன்?.. அதுக்கென்ன?”

“உதவிசெய்ய வந்தவங்க கிட்ட வந்தவுடனே கையக் காட்டி அவங்கள நிக்க சொல்லீட்டு, பைக்குள்ள கை விட்டு, இதுக்குன்னு மெல்லிசா வெள்ளையா ஒரு துணி வச்சிருந்திருப்பாங்க போல… அதை எடுத்து, கரெக்ட்டா மடிச்சு முழங்கை மேல போட்டுட்டு, அதுமேல அந்தப் பணியாளர் கை புடிச்சு உள்ள கூட்டிட்டு போய் விடணுமாமா…”

“ஐயோ… ஏதாவது சுத்தம் கித்தம்னு இருக்குமா இருக்கும்? ”

“அதெல்லாம் இல்ல… உள்ள போனவுடனே, அழைச்சு போனவங்கள நகர்ந்துக்க சொல்லீட்டு, அந்தத் துணிய பழைய படியே மடிச்சு பைக்குள்ள வச்சுட்டாங்களே… இதுக்குன்னே ஒரு வெள்ளை துணிய எடுத்துட்டு வெளிய எடுத்துட்டு வருவாங்க போல… சுத்தம் தான் பிரச்சினைனா, வேலை முடிஞ்சு வெளிய வந்த பின்ன அந்தக் கையைத்தான் நல்லா சோப்பு போட்டு கழுவுறாங்களே… அதையும் மீறி சுத்தம்னா, அதுக்கு, spray, wet wipe அப்படின்னு பலதும் இருக்கே?... அப்புறம் அதுக்குன்னு எதுக்கு ஒரு வெள்ளை துணி, அதுவும் அப்படியே உள்ள மடிச்சு வச்சுக்குறதுக்கு?!…. ”

அழுக்கு எங்கே என்று எனக்கு நன்றாக புரிந்தது.

‘சாதியெல்லாம் இப்ப யார் சார் பாக்கறாங்க’ என்று சொல்லும் மனிதர்களை நினைத்துக்கொண்டேன்.

சாதீய ஒழிப்பிருக்கட்டும். மொதல்ல சாதிய ஏற்றத்தாழ்வு ஒரு பரப்பிரம்மமா இன்னும் இருக்குன்னு ஒத்துக்கறதுதான் முதல் படி, அதுக்கான மனசே இல்லாம, சும்மா இல்ல இல்லன்னு ஜாலக்கு பண்ணிட்டு, அதக்கூட நாம் இன்னும் தாண்டலையே… இதுல அத ஒழிக்கறதெல்லாம்…. ம்ஹும்.. விடுங்க.

சாதீய அடக்குமுறையை கேள்வி கேட்கும் இலக்கிய படைப்புகள் பலவும் தவற விடுவது இதுதான். நாம் இன்னும் சாதீய ஒடுக்குமுறை இருக்கிறது என்றே ஒப்புக்கொள்ளவில்லை… சாதீயம் எது, அது எந்தப் புள்ளியில், கலாச்சார, பொருளாதார, சுத்தசுகாதாரமாக, அரிதாரம் பூசிக்கொள்கிறது என்ற புரிதலே இல்லாமல் எப்படி அதை ஒழிக்கப்போகிறோம்?!...

இந்த புள்ளியில்தான் தேவனூரு மகாதேவவின் “பசித்தவர்கள்” தொகுப்பில் உள்ள குறுநாவலும், சிறுகதைகளும், வந்து நிற்கின்றன. எனக்கு தேவனூரு மகாதேவ, அவர் RSS பற்றி எழுதிய கூர்மையான புத்தகத்தால் ஏற்கனவே அறிமுகமானாவர். கர்நாடகத்தின் முக்கிய தலித் இலக்கிய செயல்பாட்டாளர். இந்திய அரசு அவருக்கு நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. அவர் 2024 ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதும் பெற்றவர்.




இதை நயமாக மொழிபெயர்ப்பு செய்திருப்பவர், பாவண்ணன். மொழிபெயர்ப்பின் கூர்மை குன்றாமல், மொழியை எங்கே எப்படி நயமாக பயன்படுத்துவது என்ற தெளிவுடன் அவர் வரிகள் இதில் மின்னுகின்றன. அவருடைய சொந்தப் படைப்புகளோடு, அவர் மொழி பெயர்ப்புகளும் தேடிப் படிக்க வேண்டியவை.





வழக்கமாக சாதீய அடக்குமுறைகளை படைத்துக்காட்டும் இலக்கியங்கள் அதைப் பார்த்து, நம்மை கேள்வி கேட்க வைக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும். அந்த நோக்கத்தோடு அவை எதோ ஒரு வகையில் நம்மை ஒரு எதிர்வினையை நோக்கி நகர்த்தும். ஆனால் இந்தத்தொகுப்பு அப்படி இல்லை.

ஆரம்பத்தில் இதை வாசிக்கும் போது எதோ ஒரு இடத்தில் முற்று பெறாது நிற்பது போலவே தோன்றும். பிறகு ஆழமாக யோசித்துப் பார்த்தால், இதன் நோக்கம், சாதீய ஒடுக்குமுறை எவ்வாறு செயல்படுகிறது, அது எளியவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை அவர்கள் பார்வையில் நின்று பதிவு செய்வது மட்டும் தான் என்று புரிகிறது. அதைப் புரிந்து கொள்வதே நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்று தோன்றுகிறது.

அந்த வகையில் இவருடைய கதைகள், கிராமங்களின் சமூக / கலாச்சார நடைமுறை மற்றும் கதையாடல்களில் சாதீயம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்று கவனப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் எப்படி அவர்களை அது எப்படி நசுக்குகிறது என்று கூறுகிறது. இதற்கு ஈடாக தமிழில் ஏதாவது ஒரு இலக்கிய படைப்பையும் எனக்கு குறிப்பிடத் தெரியவில்லை. குறிப்பாக இதில் உள்ள 'விற்றுக்கொண்டவர்கள்', 'தத்து', 'மூடலசீமையில் கொலை கிலை முதலியன', ஆகிய சிறு கதைகள் பாதிக்கப்பட்டவர்களின் குரலில் அவர்கள் வலியை மிகக் கூர்மையாக பதிவு செய்கின்றன. இதிலிலுள்ள ‘அம்மாசி’, பெருமாள் முருகனின் மாதொரு பாகன் சென்ற தடத்தை மெதுவாக தொட்டுக் காட்டுகிறது. இறுதியாக, இதன் ‘பசித்தவர்கள்’ குறு நாவல், மெல்லிய நகைச்சுவை (Black Comedy ) இழையோட ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தின் சங்கடங்களை முன்வைக்கிறது.

மிகக் குறிப்பிடத்தக்க இலக்கியம் ஒன்று அருமையான மொழிபெயர்ப்பின் வழியே நம் வாசல் வந்து நிற்கிறது.

Comments

Popular posts from this blog

Vistas of Evolution

The art of silencing the Voices from the past

இலக்கியம் - சமர்