குரு பார்வை
பள்ளி கல்லூரி காலங்களில் என் நண்பன் குரு சொல்லும் விஷயம் தான் எனக்கு வேத வாக்கு… குன்னுரில் இருந்து ஆரம்பப்பள்ளி முடித்து, அதன் பின் தினமும் கோவைக்கு அன்னூரில் இருந்து பஸ்ஸில் வந்து போகும் கிராமத்தான் எனக்கு, கோவையின் நாசுக்கான நளினம் ஆரம்பத்தில் மிரட்சி அளித்தது. குன்னூர் பள்ளியில் அங்கிலோ இந்திய ஆங்கிலத்தில் உரையாடிய நிலை மாறி, ஆங்கிலத்தில் பேசினாலே நக்கலாக சிரித்துக்கொண்டே சுத்த “கோவை செந்தமிழில்” சர்வ சுதந்திரமாக வார்த்தைகளை வீசி பேசிக்கொள்ளும் மாணவர்கள் ஒருபுறம் என்றால், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உலாவும் நவநாகரிக சமூக வாரிசுகள் ஒருபுறம்.
பக்கத்திலேயே இருந்த பாரதி வித்யா பவனில் பரத வகுப்பில் சேர்ந்த பின், ஒருநாள், ஒரத்தில் இருந்த என்னிடம் அவனாக வந்து அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டான். புத்தகங்கள் தான் இருவரையும் இணைத்தது. உண்மையில் என்னை விட இரண்டு வயது இளையவனான அவனுக்கு நான் தான் இளைய சகோதரன். ஒரு புதிய புத்தகத்தை அவன் எனக்கு படிக்கச்சொல்லி பரிந்துரைப்பதே ஒரு அலாதியான நடைமுறை. நூலக அடுக்கில் இருக்கும் புத்தகத்தை கையில் எடுத்தவுடன் அதை புரட்டி முகர்ந்து பார்த்துவிட்டுத்தான் அதை அவன் வாசிப்பான். பிறகு வாசித்து விட்டு, அதை மிக சுவாதீனமாக கையில் எடுத்து வந்து நின்று என் முன் நிற்பான். என் முன்னால் வந்து அதன் அட்டையை விரலால் சுண்டி ‘டப்பென்ற’ சத்தம் வந்தவுடன், “வேலு , அமேஸிங் புக்டா… யூ ஷுட் ரீட் இட்” என்ற பின் எனக்கு எல்லா மனத்தடைகளும் விலகி, வாசித்தாகவேண்டும் என்ற உறுதி பூண்டு விடும். அப்படித்தான் பல ஆங்கில ஆசிரியர்கள் எனக்கு அறிமுகமாகினர். அதற்கப்புறம், உடை, காலணி, நடனம், விளையாட்டு, இசை என்று எது எடுத்தாலும் குருவின் ஒப்புதல் இருந்தால்தான் எனக்கு எதுவுமே சரி என்று தோன்றும். ஏனெனில் கோவை மட்டும் அல்ல, பெங்களூர், பம்பாய் என்று நான் செல்லாத உலகங்களுக்கும் சென்று அதன் கரை கண்டு வந்தவன் என்பதால், அவன் சொன்னால் மறுபேச்சு எனக்கு என்றுமே இருந்ததில்லை.
பொதுவாக நாங்கள் சினிமா, இசை எனப்பேசும் தலைப்புகளில் எல்லாம் அவனுக்கு ஏதாவது ஒரு பிரபலத்தைத் தெரியும். அவர்களைப் பற்றி யாரும் அறியாத ஏதாவது ஒரு விஷயமாவது வைத்திருப்பான். அவன் குடும்பத்தொடர்பும் அப்படி. அதையெல்லாம் வாய்பிளந்து கேட்டாலும், சில நேரம், “டேய் ஓவரா உருட்டாதடா” என்று சொல்லிவிடுவதும் உண்டு. அப்படித்தான், ஒருமுறை ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது என நியாபகம். காளி N ரத்தினம், டி ஆர் இராமச்சந்திரன் நடித்து சக்கைப்போடு போட்ட ‘சபாபதி’ என்ற பழம் திரைப்படம் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. அதைப் பார்த்து ரசித்து இருவரும் பேசிக்கொள்ளும் போது, அவன், “வேலு இந்தப்படத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு… என்னன்னு யூகிக்க முடியுமான்னு பாரு…” என்று ஒரு மர்மமான உதட்டோர சிரிப்போடு சொன்னான்.
“டேய், இது நாம் எல்லாம் பொறக்கறதுக்கு முன்னாடி, சுதந்திர காலத்துக்கும் முன்னாடி, எங்க பாட்டி காலத்துல வந்த படம்டா… இதில கூட உனக்கு என்ன சம்பந்தம் இருக்கும்? ஏண்டா கேக்கறவன் கேணையன்னு நெனச்சு எருமை கூட ஏரோபிளேன் ஒட்டும்னு உருட்டுரையா? ...”
“வேலு, ஆமாண்டா… சென்னைல இந்தப்படம் பார்க்க எங்க பாட்டி தியேட்டர்ல இருக்கும் போதுதான், ஜப்பான்காரன் குண்டு போட்டான். அதனால படத்த பாதில நிறுத்தி திருப்பி அனுப்பினாங்க… அப்படி போட்ட குண்டுல எங்க பாட்டிக்கு ஏதாவது ஆயிருந்தா நானே பொறந்திருக்க முடியாது பாரு…”
“டேய், இப்ப நீதான் குண்டு போடறே… இரண்டாம் உலகப்போர் சமயத்துல எங்கடா மெட்ராஸ்ல குண்டு போட்டாங்க…அப்படி ஒரு செய்தியே இல்லையே… முதல் உலகப்போர் சமயத்துல வேணா எம்டன்னு ஒரு ஜெர்மன் நீர்முழ்கிக்கப்பல் சென்னை துறைமுகம் வந்து தாக்குதல் நடந்தியது. சும்மா உனக்குத் தான் எல்லாம் தெரியும்னு உருட்டாத…”
“இல்லடா… எங்க பாட்டி சொல்லிருக்காங்க…” என்று உரத்தக்குரலில் கூறும் போதே அவன் சிவந்த முகம் இன்னும் சிவந்தது…
ஏனோ அந்த ஒரு விஷயத்தில் மட்டும் குருவின் சொல் என்னிடம் அரங்கேறவில்லை…
வெகுகாலம் கழித்து சமீபத்தில் “ஊழிற்பெருவலி” என்ற ஜெயராமன் ரகுநாதன் எழுதிய புத்தகம் வாசிக்க நேர்ந்தது. வாசிக்க ஆரம்பித்தவுடன் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. உண்மையிலேயே எம்டன் சென்னையை குறிவைத்து உள்ளே வந்து தாக்குதல் நடத்திய காலத்துக்குப் பின், இரண்டாம் உலகப் போர் காலத்தில், ஜப்பானிய குண்டு வீச்சு நடந்தது உண்மை என்ற செய்தியை நான் அறிந்தேன். ஒரு விமானம் துறைமுகம் வரை வந்து ஒரே ஒரு குண்டை இரவோடிரவாக வீசிவிட்டு சென்ற செய்தி அதிகம் பேசப்படாதது. அந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஒரு கற்பனைக் கதையை படைத்திருக்கிறார் ஜெயராமன்.
அவர் சென்னை லயோலா கல்லூரி மாணவர்; சார்ட்டர்டு அக்கவுண்டண்ட். ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டிவிஎஸ் கம்பெனிகளில் உயர்பதவி வகித்து விட்டு, சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனம் நடத்தியவர். தற்போது, பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையையும் தரும் பேச்சாளராகவும், பல கல்லூரிகளின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
கற்பனை என்றபோதும், அதற்கான விவரங்களையும் தகவல்களையும் மிக அருமையாகவும் இயல்பாகவும் கோர்த்து, அந்த காலகட்டத்தையும், அதன் மனிதர்களையும், நேர்த்தியாக படைத்து, மிகசுவாரசியமான புதினமாக வடித்துள்ளார்.
முக்கியமாக இதில் குறிப்பிட வேண்டியது, இதில் அவருடைய பாத்திரப்படைப்பு. ஒவ்வொரு பாத்திரமும் மிகக் கச்சிதமாக அறிமுகப்படுத்தி உலவுகின்றனர். அதனால் கொஞ்சம் கூட தோய்வேதும் இல்லாமல் கதை நடக்கும் காலகட்டத்தின் சென்னைக்குள் நம்மை கை பிடித்து அழைத்துச் சென்று, ஒரு அதிவேகமான காலப்பயணம் செய்ய வைத்திருக்கிறார்.
இருநூறு பக்கங்களுக்குள் கச்சிதமாக உள்ள கதை மிக வேகமாகப் போகிறது. இருந்த போதும் சில இடங்களில், இலக்கிய அழகோடான கணங்கள் வரிகளில் தெரிக்கின்றன.
உதாரணமாக,
“செல்லி வந்தபோது துரையின் மூச்சுக்காற்று சுருதியேறி இருந்தது. கப்பல் முதலில் லேசாக ஆடியது. பிறகு பெரிய அலை வந்து மோதியதால் ஒரு தள்ளாட்டம். வேகம் அதிகமெடுத்தது. அலைகள் பலம் பெற்றன. நங்கூரம் கை நழுவியது. இப்போது கப்பலுக்கு அலைகளோடு போராட்டம். ஒன்று இறுக்க இன்னொன்று நெகிழ்த்தியது. கொஞ்சம் முரட்டுத்தனம் காட்டிய அலைகள் இப்போது இடம் கொடுத்தன. கப்பல் இன்னும் இன்னும் வேகமெடுத்து கரை தட்டியது. ஒரு குலுக்கல் குலுங்கி உதறிப்போட்டது. இரண்டு பெருமூச்சுக்களுடனும் கப்பலும் கடலும் அமைதியாகின.”
இந்த வருடத்தில் நான் வாசித்தவற்றில், குறிப்பிடத்தக்க புதினங்களில் இதுவொன்று. மிக சிறப்பாக வெளிவந்துள்ள இந்தப் புத்தகம் அதிகம் கவனம் பெறாதது தான் பெரும் ஆச்சரியம்.


Comments
Post a Comment