நீரில் செல்லும் வாழ்வு.
வாழ்வென்னும் நீரோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் ஓடங்கள்தான். ஓரிடத்திலிருந்தே பயணிக்க ஆரம்பிக்கும் ஓடங்களில், பல, இலக்கு மாறி எங்கெங்கோ செல்கின்றன; சில எந்தக்கரையிலும் வந்தேறாமல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றன; சில கவிழ்ந்தும் போகின்றன. வெகு சிலது மட்டுமே கரையேறி ஆசுவாசம் அடைகின்றன. இதனிடையே ஏதோ ஒரு கரையிலோ, நீரிலோ, அவை ஒன்றையொன்று எதிர்படக்கூடும்; சிறிது தூரம் சேர்ந்தும் பயணிக்கக்கூடும். ஏதோவொரு கரையில் இறுதியில் அடங்கியபின், அலகில்லாத ஒரு கணத்தில் திரும்பிப்பார்த்தால் எதுவும் மிஞ்சுவதில்லை - அவற்றின் நினைவுகளையும் , அலைபோல் அவை ஏற்படுத்திய உணர்வுகளையும் தவிர.
அப்படி ஒரு ஓடத்திலேற்றி நீண்ட பயணத்தில் நம்மை அழைத்துச்செல்கிறார், மலையாளத்தின் பெரும் படைப்பாளியான M.T.V. படைப்பாளி என்பதைத்தாண்டி, அவர் ஒரு ராட்சதன் - வெறும் ராட்சதன் அல்ல, படைப்பில் ஒரு பிரும்ம ராட்சதன். சாகித்ய அகாதமி மற்றும் பல விருதுகளை அவருடைய படைப்புகள் பெற்றுள்ளன.
அவருடைய மஞ்சு, இறுதி யாத்திரை போன்ற குறும்புனைவுகளையோ, அல்லது அவருடைய நாலு கட்டு , இரண்டாம் இடம் போன்ற நெடும் புனைவுகளையோ வாசித்திருந்தாலும், இந்த புத்தகம் "வாராணசி" முற்றும் ஒரு புதிய பேரனுபவமாகவே இருக்கும்.
நாம் நம் வாழ்வில் சராசரியாக எத்தனையெத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்? அவர்களில் சிலர் மட்டும் நம்மோடு சில காலம் பயணித்து அவர்களின் தடயங்களை நம் உணர்விலும், அது கொடுக்கும் ஞாபகங்களிலும் விட்டுச்செல்கின்றனர்.
நீரோடிய கூழாங்கற்களைபோல், காலத்தால் வழுவழுப்பான நினைவடுக்களில் அவ்வப்போது நாம் தடவித் திறந்து பார்த்துக்கொள்கிறோம் தானே?
ஏறக்குறைய ஒரே புள்ளியில் துவங்கிய வாழ்வுகளின் பயணத்தைப் பார்க்கும் போது, பிரமிப்பு தான் மிஞ்சுகிறது.
திராவிட இயக்கத்தின் தாக்கத்தில், அதில் இணைந்து, "பாராட்டிப் போற்றிய பழமையெல்லாம், இந்த ஈரோட்டுப் பேரிடியால் இடிந்ததே பார்" என்று குரலெழுப்பிய இரண்டு வாழ்வுகள். அதிலொன்று, மிக உறுதியாக, கல்வியின் பலத்தால் முன்னேறி, நாட்டின் உயர் பதவியடைந்து பெயர்பெற்றது. நேர்மையான கட்டுப்பாடான வாழ்வை நடத்தி, ஓய்வையும், இலக்கிய செயல்பாட்டையும் எதிர் நோக்கிய நேரத்தில், பெரும் உயிர்க்கொல்லி நோயின் வழியே காலன் வந்து கதவு தட்டினான். எந்தத் தவறான பழக்கமுமின்றி வாழ்வில் இப்படி ஒரு நோய் தனக்கு ஏன் வந்தது என்று அதிர்ச்சியோடும், கேள்வியோடும் இறுதி நிலையில் தான் இதுவரை ஒப்புக்கொள்ளாத கடவுளோடு சமரசம் செய்துகொண்டு விடைபெற்றது அந்த உயிர்.
இன்னொன்று, வசதியான பின்புலத்தால் நல்லதும், சற்று அதிகமாவே கெட்டதும் என்று அனைத்தையும் அனுபவித்து, பெரு வாழ்வு வாழ்ந்தது. கிட்டத்தட்ட நினைவு கடந்த இறுதி நொடியில் கூட "நாராயணான்னு சொல்லுங்க" என்று காதொடு சொன்ன அடுத்த தலைமுறையிடம், " யாரு நம்ம போஸ்ட் மேன் நாராயணனா? " என்று தனது வழக்கமான நக்கலுடன் எந்த சமரசமும் செய்யாமலே அணைந்து மறைந்தது.
அதே போல், மதம், மதத்திற்கான அரசியல் என்று பேச ஆரம்பித்த இளைஞர்கள் இருவர். ஒருவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன். தன் அறிவாலும் உழைப்பாலும் கட்டியெழுப்பிய தொழில், அவன் பொறியியல் திறனை உலகத்துக்கு பறைசாற்றியது. தவறோ சரியோ, தன்னலம் கருதாது தான் கொண்ட நம்பிக்கைக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டான். தனிப்பட்ட வெறுப்பு எதுவும் அவனிடம் இருந்ததில்லை; உதவுவதில் யாரிடமும் எந்த கொள்கையும் பார்த்ததில்லை. தொழிலையும் குடும்பத்தையும் பின்னுக்குத் தள்ளி, தான் கொண்ட நம்பிக்கையின்பாலான அரசியலுக்கு பாடுபட்டான். இன்று அதனால் குடும்பமின்றி, தொழில் மங்கி, உடல் நலம் குழைந்து இறுதியாக தன் அரசியல் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள சிலராலேயே உயிர் பயத்தால் எங்கோ மறைந்திருக்கிறான்.
இன்னொருவன் எளிமையான ஆனால் உயர்சாதி பின்புலத்தில் இருந்து வந்து, ஆரம்பத்தில் இருந்தே சமூக நீதி மீதும், அதனால் வெகு காலமாக சமூக படிநிலையில் உச்சத்தில் இருந்த தனது சமுதாய நிலை மாற்றிய அரசியல் மீதும் வெறுப்போடு வளர்ந்தான். ஆரம்பம் முதலே தன் சமூகம் மற்றும் மதம் சார்ந்த இயக்கம் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வந்தான். கல்வியில் முன்னிலை பெறாவிட்டாலும், தன் உழைப்பால், வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற கூற்றுக்கு ஆதாரமாக உலகளவில் பணிபுரிந்து, தன் சமூகம் சார்ந்த தொடர்புகளை விரிவாக்கிகொண்டான். அதற்கேற்றவாறு, தன் சமூக நலம் மதம் சார்ந்த அரசியல் தொடர்புகளை பேணி, அதில் தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டான். அதன் மூலம் தன் வெறுப்பைத் தான் பரஸ்பரம் பரிமாறி வளர்த்துக்கொண்டான். இன்று அதன் மூலமாகவே பெரும் பொருள் ஈட்டும் வழியையும் நிறுவிக்கொண்டான். வளமும் வசதிகளுக்கும் கூடி விட்டது. இருந்தபோதும் அவனுடைய வெறுப்பு மாத்திரம் குறையாமல் வெகுவாகவே கூடியிருக்கிறது.
MTV யின் இந்தப் புதின வாசிப்பின் முடிவில், இப்படி பல ஓடங்களின் அலையடித்த நீரோட்டம் என்னைப் பெருமூச்சு விட வைக்கிறது.
அதனால் தான், "வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. அதன் சலனங்களை அர்த்தப்படுத்திக் கொள்ள முயலும்போது அது வாழ்வாகிறது" என்று இந்தப்பதிப்பின் குறும் முன்னுரையில் இதைத் தமிழில் மொழிபெயர்த்த சிற்பி, தன் வரிகள் குறிப்பிடுகிறார். அங்கிருந்தே துவங்கிவிடுகிறது அவரது ராஜபாட்டை. வேறு என்ன சொல்வது?! தமிழிலக்கிய பரப்பில் சிற்பி என்றறியப்பட்ட சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர். அவருடைய மொழிபெயர்ப்பில் இதுவரை வந்த புத்தகங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. அதன் தெளிவும் எளிமையான அழகும் நம்மை மயக்க வல்லது.
இந்தப் படைப்பிலும் வரிகளின் உள்ளார்ந்த அழகும் கற்பனையில் ஒரு கனவுலகை காட்டும் நளினமும், பிரமிக்க வைக்கிறது.
“கங்கை விழித்தெழுவதைப் பார்த்திருக்கிறாயா? நான் முதன்முதலாகக் கண்டேன்.
முதல் வெளிச்சத்தின் பிஞ்சுக் கைகள் தொட்டு அழைக்கின்றன. அம்மா எழுகிறாள். அலைகள் அசையத் தொடங்குகின்றன. உடுத்த ஆடைகளை அம்மா ஒழுங்கு செய்கிறாள். கரையோரம் கிடைக்கும் படகுகளை அவை தட்டி எழுப்புகின்றன. கங்காபுத்திரர்கள் புதிய நாளின் தொடக்கம் என்று அறிந்து படகுகளை இடம் மாற்றிக் கட்டுகிறார்கள். அந்தத் துறையிலிருக்கும் புரோகிதர் குடைகள் உயர்கின்றன. சீதளா தேவியின் ஆலயத்திலிருந்து மணியோசை கேட்கிறது.”
அதையும் தாண்டி சுயதரிசனம் செய்ய வைக்கும் படைப்பு இது. அந்த வகையில் தமிழிலும் கொண்டாடப்படவேண்டியது தான். ஆனால், இது தமிழில் நேரடியாக படைக்கப்பட்ட ஒன்றில்லையே என்று கூறுகிறீர்களா? அதனாலென்ன, சிற்பியின் மொழித்திறன் எந்த இடத்திலும் அப்படி உணரவைப்பதில்லையே. மேலும், சிறந்த இலக்கியங்களுக்கு ஏது மொழி?...



Comments
Post a Comment