புலம்பெயர் வாழ்வு
2009 மே மாதம் நான் ஜெர்மனி வந்து இறங்கிய நேரம். பணிமாற்ற நிகழ்வில் இந்தியாவை விட்டு ஜெர்மனியில் வந்து வாசிக்க ஆரம்பித்த காலம். அப்போது தமிழுலகம் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தின் நடுவே இருந்தது. ஈழத்தில் இருந்து நெஞ்சை நடுங்க வைக்கும் துயர நிகழ்வுகள் தொடர் செய்திகளாய் வந்து, ஈட்டியாய் நெஞ்சைத் துளைத்தன. இந்திய, தமிழக மற்றும் உலக அரசியல் தலைமைகளை வெறுப்புடன் பார்த்த காலகட்டம். அதுவரை தமிழகத்தில் தொலைவில் இருந்து பார்த்திருந்த நிகழ்வுகள், ஐரோப்பாவின் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நெருக்கத்தில் கண்ணீரையும், துயரத்தையும், நெருக்கத்தில் அனுபவிக்க வைத்தது. இப்படி ஒரு துயரம் எப்போதும் இல்லை என தோன்றியது. உலகமே தமிழினத்தின் அழிவை பார்த்துக்களிப்பதாய் மனம் அலைமோதியது. ஆனால் காலமும் வாழ்வின் யதார்த்தங்களும் அதைக் கடக்க வைத்தன. இருந்தபோதும், அந்த ரணங்களின் வடுக்களும், வலிகளின் தடங்களும் மறையாமல் அவ்வப்போது வந்து அழுந்துவது மாத்திரம் நிற்கவில்லை. இந்தியாவுக்கு திரும்பிய பின்னும் அந்த அழுத்தம் இன்னும் முழுதாக விலகவில்லை. போரின் முடிவிற்கு பின்னால் மெல்ல மெல்ல யதார்த்தங்கள் விளங்க ஆரம்பித்தன. வஞ்சிக்கப்பட்ட த...