புலம்பெயர் வாழ்வு

2009 மே மாதம் நான் ஜெர்மனி வந்து இறங்கிய நேரம். பணிமாற்ற நிகழ்வில் இந்தியாவை விட்டு ஜெர்மனியில் வந்து வாசிக்க ஆரம்பித்த காலம். அப்போது தமிழுலகம் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தின் நடுவே இருந்தது. ஈழத்தில் இருந்து நெஞ்சை நடுங்க வைக்கும் துயர நிகழ்வுகள் தொடர் செய்திகளாய் வந்து, ஈட்டியாய் நெஞ்சைத் துளைத்தன. இந்திய, தமிழக மற்றும் உலக அரசியல் தலைமைகளை வெறுப்புடன் பார்த்த காலகட்டம். அதுவரை தமிழகத்தில் தொலைவில் இருந்து பார்த்திருந்த நிகழ்வுகள், ஐரோப்பாவின் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நெருக்கத்தில் கண்ணீரையும், துயரத்தையும், நெருக்கத்தில் அனுபவிக்க வைத்தது. இப்படி ஒரு துயரம் எப்போதும் இல்லை என தோன்றியது. உலகமே தமிழினத்தின் அழிவை பார்த்துக்களிப்பதாய் மனம் அலைமோதியது.




ஆனால் காலமும் வாழ்வின் யதார்த்தங்களும் அதைக் கடக்க வைத்தன. இருந்தபோதும், அந்த ரணங்களின் வடுக்களும், வலிகளின் தடங்களும் மறையாமல் அவ்வப்போது வந்து அழுந்துவது மாத்திரம் நிற்கவில்லை. இந்தியாவுக்கு திரும்பிய பின்னும் அந்த அழுத்தம் இன்னும் முழுதாக விலகவில்லை.
போரின் முடிவிற்கு பின்னால் மெல்ல மெல்ல யதார்த்தங்கள் விளங்க ஆரம்பித்தன. வஞ்சிக்கப்பட்ட தமிழ் இனம் என்று ஒற்றை புள்ளியாய் தெரிந்த ஒரு விஷயத்தின் உள்ளே, பல நிஜங்கள் புலப்பட, அது அப்படி இல்லை என்று விளங்க ஆரம்பித்தது. புலம்பெயர் தமிழர் என்ற பெயரில் ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களை வேட்டையாடிய நரிகளில் பல, தமிழ் நரிகள் தான் என்று தெரிந்தபோது திடுக்கிட நேர்ந்தது. போருக்கு முன்பே அகதிகளாய் தமிழ்நாட்டில் சுரண்டப்பட்ட நிஜமும், போரின் போதே ஈழத்துக்கு உதவி என்ற நீரோட்டத்தில் அள்ளிக்குடித்த நீசர்களும் மற்ற தமிழர்கள்தான் என்ற உண்மையும் முகத்தில் அறைந்தது. ஆனால் போருக்கு பின்னான கொடுமையில் இதுவெல்லாம் ஒன்றுமில்லை என்றானது. போரழிவுக்கு பின் புலம்பெயர் தமிழர்களிடம் நடத்தப்பட்ட சுரண்டல்களைப் பற்றி நேரடியாக அறிய அறிய தலை சுற்றி, பெரும் கலக்கம் வந்தது. போரில் தப்பி சிகிச்சைபெறும் தலைமைக்கு என்றும், மறுவாழ்வுக்கு என்றும், ஆரம்பித்து வகை வகையாய் தமிழர்கள் அனைவரிடமும் பெரும் பணப்பறிப்பு நிகழ்ந்தது. அதில் பல்வேறு இன்னல்களை கடந்து தாங்கள் வந்த இடத்தில் பெரும் பாடுபட்டு ஈட்டிய பணத்தை பெரிதும் இழந்தவர்கள் தமிழ் ஏதிலிகள்தான். தமிழ்நாட்டில் பலகாலமாக தன்னை எரித்துக்கொண்ட இளைஞனுக்கான நீதிக்கு, தமிழருக்கான அரசியலுக்கு என்று விதவிதமாக உண்டி குலுக்கிக்குலுக்கி ஏமாற்றும் புரட்டுகள் இன்று திரள்நிதியாக வந்து நிர்ப்பது வரை ...
இது தவிர ஐரோப்பாவிலும் வேறு நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் பணத்தில் அவர்களுக்கு சொத்து வாங்குவதாக தமிழகத்தில் ரியல் எஸ்டேட் வேட்டைகளை நிகழ்த்தி, பிறகு அவர்களுக்கு நாமம் சாத்தியவர்களும் தமிழர்கள்தான். அகதிமுகாம்களில் இருந்த தமிழர்களின் கழுத்திலும் காதிலும் இருந்த, தப்பிவரும்போது காப்பாற்றிக்கொண்டு வந்த, கடந்து போன வாழ்வின் எச்சங்களாக இருந்த பொன்னை ஓன்றுக்கும் இரண்டுக்கும் கடன் கொடுத்தது கவர்ந்தவர்களும் தமிழர்கள் தான்.




கடைசியாக அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய "கடவுள தொடங்கிய இடம்" என்ற புதினம்தான் ஈழ புலம்பெயர் தமிழர்களின் இன்னல்களையும் அவர்களின் நிலையையும் மிக தத்ரூபமாக காட்டிய ஒரு படைப்பு. அதன் பின், அதன் அடுத்த கண்ணியாய், ஆசி கந்தராஜா எழுதிய, இந்த "அகதியின் பேர்ளின் வாசல்" என்ற புதினம் கவனிக்கத்தக்கது. ஆசி கந்தராஜா ஜெர்மனியில் மேற்படிப்பு பெற்று, பின்பு அங்கேயே பலகாலம் வசித்து, மொழிபெயர்ப்பாளராக இருந்ததனால், அவருடைய இந்த புத்தகத்தில் புலம்பெயர்வு என்ற நிகழ்வின் மிக நுணுக்கமான அம்சங்களை மிக விரிவாக படைத்திருக்கிறார்.
புலம்பெயர்வின் அடிப்படை காரணங்களையும், அதன் வகைகளையும், மிக விரிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக அரசியல் ஏதிலிகள் மற்றும் பொருளாதார ஏதிலிகளின் வேறுபாடுகளையும், மேற்குலக நாடுகளின் அது தொடர்பான நடவடிக்கைகளையும் பற்றி மிக விரிவாக விளக்கியிருக்கிறார்.
ஏழைத் தமிழர்கள் நிறைந்த மும்பையின் தாராவிப் பகுதி நமக்கெல்லாம் கலகக்காரர்களும், போராளிகளும் நிறைத்த ஒரு சமரச சன்மார்க்க சமதளமாகவே தமிழ் சினிமாவின் வழியாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அது போன்ற கற்பனைகள் நீக்கிய அதன் கருப்பு பக்கங்களை இதில் பார்க்கலாம். தமிழ் பெண்களுக்கு, குறிப்பாக புலம்பெயர் தமிழ்ப் பெண்களுக்கு இது ஒரு கொடுங்காடு என்ற உண்மையையும், அவர்களை வேட்டையாடுவது சக தமிழ் ஆண்கள் தான் என்ற யதார்த்தத்தையும் அவர் காட்டும்போது, கும்பி கலங்கி மனது பதைபதைக்கிறது.
இதில் விரியும் பாலமுருகனின் உலகம் கந்தராஜாவின் படைப்புலகம். அவர் அனுபவமும் செயல்பாடுகளும் அளித்த தெளிவு அது எனப்புரிகிறது. அளவான கற்பனையும் துயரம் பொதிந்த உண்மைகளும் இதை ஒரு முக்கிய படைப்பாய் சமைந்திருக்கின்றன. குறிப்பாக இதில் வரும் பாலமுருகனான, ‘முருகனில்’ எத்தனை ‘கந்தன்’ என்ற மயக்கத்தை வேறு அளிக்கிறது. அந்தக் கேள்வியிலேயே பொதிந்திருக்கிறது இதன் வாசிப்புச் சுவை… 🙂

Comments

Popular posts from this blog

Vistas of Evolution

கவனமும் புரிதலும்

The time of the Tiger