காற்றில் கலந்து போன தமிழ் வாசம்...
நல்ல புதினங்களை வாசிக்கும் பொது இரண்டு நிலையில் அவை நம்மை பாதிப்பது வழக்கம். சில வரிகளைப் படிக்கும் போது, அவை நம் நினைவடுக்குகளுக்குள் ஒரு பின்னோக்கிய பயணத்தில் ஆழ்த்திவிடுபவையாக இருக்கும். வேறு சில, நமது கற்பனையில் மலர்ந்து, விரிந்து, வேர்விட்டு விடும். பிறகு பலகாலங்கள் கடந்து அந்த வரிகளின் பின்னணியில் அமைந்த இடங்களுக்கோ, சூழ்நிலைகளுக்குள்ளோ நாம் தற்செயலாக கடந்து சேரும்போது, அந்த வரிகளின் உணர்வுகள் அலை அலையாய் மேலெழுவதும், ஆங்கிலத்தில் Deja Vu என்பார்களே, அந்த இனம்புரியாத பரிச்சய உணர்வினை கிளர்ந்து விடுபவையாக இருந்துவிடும். அதுவும் ஒரு புதினத்தின் களம், கடந்தகாலத்தில் இருந்துவிட்டால்?... அதுவும் அன்றைய சரித்திர சம்பவங்களின் பின்னணியில், நாம் அறிந்த ஒரு இடத்தில் ஒரு காலும் அறியாத ஒரு நாட்டில் இன்னொரு காலும் வைத்து நம்மை நிறுத்தி காட்சிகளை விரித்தால் ?... ஒரு தீவிர அபுனைவு வாசிப்பின் பின், ஆசுவாசத்துக்காகவும் இடைவெளிக்காகவும் கையில்லெடுத்த புதினம் இது. ஆனால் இதுவோ, என்னை புதுச்சேரியில் இருந்து கப்பலில் ஏற்றி, சைகோன் வரை ஒரு காலப்பயணத்தில் அழைத்துச்சென்றுவிட்டது. இதை எழுதிய நாகரத்த...