ஆற்றோடு ஒரு பயணம்
வருடம் தவறாமல் நடக்கும் காவிரிப் பிரச்சினை இங்கே மறுபடியும் துவங்கியிருக்கிறது. மாறியிருக்கும் அரசியல் அதிகாரங்களின் பின்னணியில், இது இந்த வருடம் சற்று உக்கிரமாகவவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பிரிவினை வழி அரசியல் நடத்தும் ஒரு தரப்பு அரசியல் அதிகாரம் இன்றி நிற்கும் நேரத்தில் அவர்களின் நல்வாய்ப்பாக இது அமைந்திருப்பதால், அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இது இந்நேரத்தில் முக்கியம் பெறுவது தவிர்க்க இயலாது. ஆனால் கருநாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இது தவிர பல ஆறுகள் கால காலமாக ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இலக்கியம், திரைப்படம், கலாச்சாரம் என. அவற்றில் சில இருபக்கமும் வெளிப்படையாக வற்றி இருக்கலாம், ஆனால் அவற்றில் சுவடுகள் இன்றும் உண்டு. அப்படி ஒரு ஆறுதான் நாடகத் துறை. காவிரியின் இரு கரைகளிலும் நாடகத்துறையும் அதன் குழுக்களும் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. சினிமா வெகுஜனத்தின் கற்பனைகளைக் கவர்ந்துகொள்ளும் காலத்திற்கு முன்பு, ஊர் ஊருக்கு சென்று முகாம் அமைத்து நாடகம் நடத்தும் குழுக்களும் அதை தேடித் தேடி ரசித்த கூட்டமும் ஒரு காலத்தில் நிஜமாகவே இருந்தது. அதில் பெற்ற புகழின் மூலம் சினி...