வாயிலைத் தேடி...
வரலாற்று ஆராய்ச்சி என்ற ஒன்றைப் போல் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயம் வேறொன்று இருந்ததே இல்லை. தெருமுனை அரசியல் பேச்சாளரில் இருந்து பல்கலைக் கழகங்களின் உள்ளரங்கங்களின் முற்றங்கள் வரை தமிழ் வரலாறு எப்போதும் பேசுபொருளாகவே இருந்திருக்கிறது. அப்படி பேசும் வரலாறு ஒரு பெரும் ஆய்வின் அடிப்படையினாலா அல்லது உணர்வுக் கிளர்ச்சிக்காக பேசப்படுகிறதா என்று பெரும்பான்மை சமூகம் கவலைப் பட்டதில்லை. “ கல் தோன்றி மண்தோன்றா” என்றே பெரும்பாலான உரையாடல்கள் துவங்கும். முறையான பேரகழ்வுகளோ அது தொடர்பான ஆய்வுகளோ முறையாக நடத்தி பதிப்பிக்கப்படாமலேயே பல தரப்பும் தமிழ் வரலாற்றை பந்தாடிவந்தன. பிறகு, இந்திய தொல்லியல் ஆய்வின் பிரிவாக ஐராவதம் மகாதேவன், குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வின் வழியே சற்று ஒளிக்கீற்றுகள் வரத்துவங்கின. அதன் பின்பற்றி பாலகிருஷ்ணன் ஐயா போன்றோர் எடுத்த தொடர் முயற்சி தமிழக தொல்லியல் துறை மூலம் கீழடி வரை வந்து நின்றபோது, ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்திருப்பது கண்கூடானது. இதைத்தவிர ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை சுவாரசியமான தளத்தில் எழுதிய ஆய்வாளர் பலர...