போரின் உண்மை முகம்

ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸின் தனிமையான ஒரு மலைக்கிராமம் அது. இரண்டாம் உலக போருக்குப் பின்னான சூழல். அப்போது அந்தப் பகுதிக்கு தலைமையேற்க வரும் நேச நாட்டு படைகளைச்சேர்ந்த பிரிட்டிஷ் மேஜரின் ஜீப் ஓட்டுனரை, அந்த மலைப்பாதையில் வைத்து, சரணடைந்த ஆஸ்திரியப் படைப் பிரிவின் அடையாளம் தெரியாத வீரன் ஒருவன், மர்மமான முறையில் சுட்டுக்கொல்கிறான். தப்பித்துப்போன அவனைத் தேடும் ஒரு தேடலில் பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை. கச்சிதமான Alastair Maclean நாவலின் துவக்கம். அதே மொழியாளுமை. ஆனால் “The second victory” என்ற இந்தக் கதையின் அடிப்படைக் கரு அதுவல்ல. காரணம் இதை எழுதியது, Morris West. Morris ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே செயின்ட் கில்டாவில் பிறந்தவர். இளவயதிலேயே தனது தனிப்பட்ட வாழ்வின் சிக்கலில் இருந்து விடுபட ஒரு கத்தோலிக்க திருச்சபையின் அமைப்பில் சேர்ந்தவர். வளர்ந்த பின் அதிலிருந்து அவர் விலகி வந்தாலும், அவருடைய எழுத்தில் விவிலிய மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நிழல் எப்போதும் படிந்தே இருந்திருக்கிறது. பரபரப்பாக ஆரம்பிக்கும் அவருடைய நாவல்கள், மனித மனத்தின் அடிப்படைச்சிக்கல்கள், அதனால் ஏற்படும் வ...