அற்புதங்களின் காலம்.
1665 வருடம், இங்கிலாந்து, குறிப்பாக இலண்டன் மாநகரம் பெரும் பேரழிவைச் சந்தித்தது. வசந்தத்தின் வருகை, Black Death என்னும் பெரும் bubonic Plague மரணத்தையும் சேர்த்தே அழைத்து வந்தது. ஒரே வாரத்தில் 7000 மக்கள் மரணித்த உச்சத்தை தொட்டது. மொத்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மரணக்குழியில் தள்ளப்பட்டனர். இலண்டனின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு காலியானது. ஒரு பெரும் ஊழித்தாண்டவம் ஆடி, 1666ல் மெதுவாக நின்று போனது.
அப்படிப் பரவிய இந்தக் கொலைத்தொற்று ஒரு துணிச்சுருள் வழியே எயாம் ( Eyam ) என்ற ஒரு சிறு கிராமத்தைச் சென்று சேர்ந்ததது. அதன் பின், அக்கிராம மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டு தொற்றையும், அதன் கொடுமையையும் எதிர்கொண்டு மீண்ட சரித்திரம் தான் இந்த புத்தகத்தின் முடிச்சு.
சரித்திர நிகழ்வுகளையும், உண்மையில் வாழ்ந்த மனிதர்களையும், வாய்வழி கேட்ட சம்பவங்களையும் இணைத்து, தன் கற்பனையின் தூரிகையைக் கொண்டு, Geraldine Brooks படைத்த சித்திரம் தான் இந்த “Year of Wonders” என்ற புனைவு.
புலிட்சர் விருது பெற்ற Geraldine Brooks, ஆஸ்திரேலியாவில் பிறந்த பத்திரிகையாளர். அவர் எழுதிய முதல் புனைவு இது. கத்தோலிக்கராக பிறந்த இவர், அமெரிக்க யூதரான் Tony Horwitzசை மணந்த பிறகு யூதராக மதம் மாறினாலும், தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்ரமிப்பை எதிர்த்தது களமாடும் முக்கிய இலக்கிய ஆளுமைகளில் ஒருவர்.
அவரது முதல் புனைவான இந்த “Year of Wonders”, 2001ல் வெளிவந்தது. இதில் தொற்றை எதிர்த்துப் போராடும் ஆன் என்ற எளிய இளம்பெண்ணின் பார்வையில், அவளைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வழியே, அந்த மக்களின் பயத்தை, துயரத்தை, தடுமாற்றப் பிறழ்வுகளை மிக நெருக்கமாக விவரித்துக்காட்டும் விதம் கண்ணீரை வரவழைக்கும். அதற்காக அவர் இடையிடையே கவனமாக கையாண்டிருக்கும் அக்கால மொழிநடையும், அதை மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் Geraldine பயன்படுத்தியிருக்கும் விதமும் அபாரமானது. வாசிக்கும் போது, எந்த இடத்திலும் தடுமாறவோ கவனம் சிதறவோ செய்யவில்லை. தொடரும் மரணங்களுக்கிடையே சாமானிய மனிதர்களின் கீழ்மையை காட்டும் நேர்த்தி அவர்கள் மென்மையான கணங்களையும் காட்டும் விதத்திலும் மின்னுகிறது.
இவை அனைத்தையும் கடந்து, அவர் முன்வைப்பது மிக முக்கியமான ஒன்று. ஆங்கிலத்தில் ‘Righteousness’ மற்றும் ‘Self Righteousness’ என்ற ஒன்றே போல் தோன்றும் வார்த்தைகள் உண்டு. அவை மனிதர்களின் வெவ்வேறு விதமான நிலைகளை குறிப்பவை. முதலாவது நேர்மை, நிலை தடுமாறாத் தன்மை ஆகியவற்றை குறிக்கும். இரண்டாவது, தானே தன் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளை உயர்வாகக் கருதி, மற்றவர்களை துச்சமாகக் கருதும் நிலையைக் குறிக்கும். Righteousness என்பதற்கு உதாரணமாக இராமன், இயேசு போன்ற பாத்திரங்களை கருதலாம். அதே Self Righteousness என்பதை இன்றைய சமூகத்தின் வலது, இடது சாரி கடும்போக்கு கொண்டவர்களிடம் வழக்கமாக காணலாம். ஒன்றுக்கொன்று எதிரெதிரான நிலைப்பாடுகளாகவே இவை வழங்கிவருகின்றன. தமிழில் இதற்கு இணையான சொற்பயன்பாடு எனக்குத் தெரியவில்லை.
Geraldine, இதில் அந்தக் கட்டமைப்பை கேள்விக்கு ஆளாக்கும் விதம் மிக முக்கியமானது. பொதுவாக மத நம்பிக்கைவழியே Righteousness கற்பிக்கப்படுகிறது. அந்த தீவிர மதநம்பிக்கை Self Righteousnessக்கு வழிகோலும் இடம் இதில் முக்கிய முடிச்சு. Righteousness என்று கருதிய ஒன்று, உண்மையில் ஆணாதிக்க கட்டமைப்பு என்பதும், அது கொண்டு சேர்க்கும் இடம் மனிதாபிமானமற்ற வறண்ட Self Righteousness என்று விளங்கும் இடம் பிரமாதமாகப் படைக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் உள்ள தொடர்பும், அவற்றுக்கு இடையே உள்ள மெல்லிய கோடும் தொட்டுக்காட்டப்படுகிறது. அதுவே கதையின் அடிப்படை முடிச்சும் கூட. மதங்கள் மற்றும் சித்தாந்தங்கள் வழியே நிறுவப்படும் Righteousness என்ற கட்டமைப்பின் பின்னே மறைந்திருப்பது அடிப்படை நேர்மையற்ற ஆணாதிக்கப் பார்வை என்பதை, அவர் விவரித்துக் காட்டும்போது, அது பிரமிக்க வைக்கிறது.
துயரத்தின் பின்னே நிகழும் அற்புதம் இது.


Comments
Post a Comment