பாலை மனம்
என் தாத்தா, தான் பிறந்து, வளர்ந்து, பல வருடங்களாக தொழில் நடத்திய ஊரையும், தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்த ஊரின் மத்தியில் இருந்த பெரிய வீட்டையும் விட்டு, என் படிப்பிற்காக நகரின் மத்தியில் வந்து குடியேறிய சிலகாலங்களில் டேவிஸ் அண்ணன் வந்து சேர்ந்து கொண்டான். மலையாளம் கலந்த தமிழும், வியப்புகலந்த விழிகளில் எப்போதும் சிரிப்புடனும், தன் ஆட்டோவோடு வந்து எங்கள் தாத்தாவின் ஆஸ்தான சாரதியாகவும், பாட்டியின் அனைத்து வெளிவேலைகளுக்குமான கண்ணனாகவும் மிக இயல்பாக இணைந்து கொண்டான். சிவந்த நிறத்தோடு, உயரமாக, கூரிய நாசி, சுருட்டை முடியுடன், கிட்டத்தட்ட நடிகர் சுரேஷ் மேனனைப்போன்ற தோற்றத்துடன் இருந்த அவனை அப்படிப் பார்ப்பது பலருக்கு கடினமாக இருக்கும்; அவனோடு அவர்கள் பேசிப்பார்க்கும் வரை. பேசினால் மிக அப்பாவியான “யதார்த்தமான” பேச்சு அவனை அனைவருக்கும் பிடித்தவனாக மாற்றிவிடும். கேரளத்தின் நெம்மரா பக்கமிருந்து கோவைக்கு வந்து அந்நகரின் அங்கமாகிப் போனவன் அவன். சொந்த ஊரில் இருந்தே வெகு காலமாக ‘தொர முதலாளியிடம்’ இருந்து வந்த இடது, வலது கரங்களையும், துவாரபாலகர்களையும் மீறி அவரின் அன்புக்கு அவன் பாத்திரமானது அதிசயம். அ...