அன்பே மருந்து
மனித மனதில் வெறுப்பு என்ற உணர்ச்சி மிக எளிதாக நுழைந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் விருப்புவெறுப்புகள் தனித்தனியாக இயல்பாகவே இருக்கும். அது தவிர்க்க முடியாதது. சிறுவயதில் எனக்கு ரொட்டி மீது இனம் புரியாத கடுமையான வெறுப்பு இருந்தது. ஆனால் இன்று உலகம் முழுவதும் சென்று விதவிதமான ரொட்டிகளை சுவைத்த பின், ரொட்டிகளின் மீது எனக்கென்று தனித் தேர்வாக அது பரிணமித்துவிட்டது. அன்று எனக்கு இருந்த வெறுப்பின் வேர்களைப்பற்றி எண்ணிப்பார்த்தால், அப்போது காய்ச்சலின் போது கட்டாயப்படுத்தி உண்ண வைத்த ரொட்டியில் வந்து நிற்கும். இப்படி இயல்பாக எழும் வெறுப்புகள், வாழ்வின் அனுபவச் செறிவாலும், மன முதிர்ச்சியினாலும் மாறிப்போவது கூட இயல்புதான். ஆனால் சிலநேரங்களில் நம் வாழ்வில் எதிர்பாராத விரும்பத்தகாத, பேரதிர்ச்சி தரும் நிகழ்வுகளை எதிர்கொள்ள நேர்கிறது. அதன் காரணமாக இரண்டு விதமான விளைவுகள் நேரலாம். ஒன்று, அந்த நிகழ்வுகளின் வழியே ஏற்பட்ட புரிதலால், அப்படி ஒரு நிலை நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நேராமல் இருக்க என்ன செய்வது என்று அக்கறையும் அன்பும் மேலோட வழியமைக்கலாம். அது நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கு...