ஒரு கோப்பைத் தேநீர் - பாகம் 1
வீட்டில் அப்பா எப்போதும் டீ மட்டுமே குடிப்பார். இன்று வரை அவருக்கு எந்த சந்தோஷமும் துக்கமும் ஒரு கோப்பை தேநீரில் தீர்ந்து போகும். அம்மாவை மணம் புரிந்த பின் என் பாட்டிக்கு அதிர்ந்து பேசாத, மரியாதையான, குறிப்பாக டீ மட்டுமே குடிக்கும் மாப்பிள்ளை என்பதில் ஏகப்பெருமை. அவர் என்ஜினீயர் என்பதோ, அரசு அதிகாரி என்பதோ அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. டீ குடிப்பதைத்தவிர வேறு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாத மாப்பிள்ளை என்பது அவளுக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது.
கடைசி வரை பிளாஸ்கில் தீரத்தீர காபியை அவளிடம் கேட்டு வாங்கி வைத்து, இரவு பத்து மணிக்குக் கூட குடிக்கும் தாத்தாவின் கணக்கில் அவருடைய காப்பி குடிக்கும் பழக்கமும் ஒரு கெட்ட பழக்கமாகவே அவள் அகராதியில் என்றும் இருந்தது. அத்தோடு இதையெல்லாம் சொல்லிச் சொல்லி என்னை வெறும் பால் மட்டுமே குடிக்க வைத்து வளர்த்தாள்.
கல்லூரி படிக்கும் காலத்தில் போரடித்தால் கட்டடித்து விட்டு டூ வீலரில் மலையேறி குன்னூருக்கோ ஊட்டிக்கோ சென்று TANTEAயில் டீ குடித்துவருவது தெரிந்திருந்தால் டீ குடிப்பதைப்பற்றிய அவளுடைய அபிப்பிராயம் என்னவாகியிருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
தேநீர் என்பது குடி, போதைப்பொருள் இதற்கெல்லாம் எதிரான ஒரு வஸ்து; அதைக்குடிப்பது சாதுவான, நல்லபிள்ளைத்தனமான பழக்கம் என்றே புத்தியில் பதியப்பட்டிருந்தது.
அதனாலோ என்னவோ, பிற்காலத்தில் காபி குடிக்கும் பழக்கம் எனக்குத் தாமதமாகவே வந்து சேர்ந்தது. இருந்தபோதும், டீ குடிப்பவர்களைப் பார்த்தால், ஒரு குற்றவுணர்ச்சி எனக்குள் சிலநேரம் எழுவதைத் தவிர்க்கமுடிந்ததில்லை.
இதெல்லாம் தகர்ந்தது நான் வாசித்த இரு புத்தகங்களால் தான். அதில் ஒன்று அமிதவ் கோஷ் எழுதிய "Smoke and Ashes: A Writer's Journey through Opium's Hidden Histories" என்ற அல்புனைவு.
தேனீர் குடிக்கும் பழக்கம் எப்படி opium எனப்படும் அபின் பரவலாக்கத்துக்கும், அதன் வழியே சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் சுரண்டலுக்கும் காரணமானது என்பதோடு காலனியாதிக்கம் இந்தியாவில் மிக உறுதியாய் நிலை பெறுவதற்கும் ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்பதைப் படித்தவுடன் என் புத்தியில் டீ பற்றிய சித்திரம் உடைந்தே போனது.
ஆரம்பத்தில் அரச குடும்பத்தினரின் ஆடம்பரத்துக்கும், மருத்துவப் பயனுக்கும் இந்தியாவில் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிரிடப்பட்ட அபின், கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராசைக்காக ஒரு பெரும் அடிமை சமூகத்தை உருவாக்கியது என்பதை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வை வார்த்தைகளில் வடிக்க முடிவதில்லை.
நம் நாட்டின் வடபகுதியில் இன்று நாம் BIMARU என்றும் Cow Belt என்றும் இழிவாக குறிக்கப்படும் உபி, பிகார் போன்ற பகுதிகள், குறிப்பாக மிக வளமான கங்கை சமவெளியின் பகுதிகள் இன்றும் ஏன் வறுமையிலும், பிற்போக்குத்தனத்திலும் உழல்கின்றன என்ற கேள்வியின் ஆரம்பப்புள்ளி கிழக்கிந்தியக் கம்பெனியின் அளவுகடந்த பேராசையிலும் அதற்காக அது நடத்திய அபின் தொழிலிலும், வந்து நிற்கிறது.
அதற்காக அந்த வளமான பகுதியில் இருந்த உழவர்களை ஒரு பெரும் அடிமைச்சங்கிலியால் அவர்கள் கட்டிஇருந்ததையும், தொடர்ந்து அவர்களை தப்பிக்க முடியாமல் வறுமையில் தள்ளி வாட்டியதையும் அறியும் போது, ஏற்படும் உணர்வு மிக தீவிரமானது.
அது மட்டுமல்லாமல் சீனாவின் Boxer rebellion மற்றும் அதன் பின்னணி கிழக்கிந்திய கம்பெனியின் - தேநீருக்கு பதிலாக அபின் என்ற - குள்ளநரித்தனத்திலும் பேராசையிலும், அதற்காக அது ஆடிய பேயாட்டத்திலும் இருந்தது. அத்தோடு அது நடத்திய சீனப் படையெடுப்புகளின் தொடர்ச்சியாகவே இன்றும் சீன இந்திய உறவுகளில் எதிரொலிக்கிறது.
இன்று போதை கடத்தலுக்கு எதிராக அவர்கள் எதோ ஒரு நாட்டை நோக்கி சுட்டும் போது அவர்களின் அழுக்கான பின் பக்கம் கண்ணில் பட்டு, அதில் அவர்களின் போலித்தனம் பல்லிளிக்கிறது.
அதேசமயம், இன்று அதே அபின் வலி நிவாரணியாக உருமாறிய பின்பும் மேற்குலகின் போதைப்பழக்கத்துக்கும், அதை தொடர்ந்த போதைக்கடத்தலுக்கும் காரணமாவது பெரு முதலாளிகளின் பேராசை தான் என்னும் புரிதல், ஒரு பெருமூச்சில் முடிகிறது.
அமிதவ் கோஷின் பெரும் வரவேற்பு பெற்ற சரித்திர புனைவான Sea of Poppies மற்றும் அதன் பின் வந்த River of Smoke, Flood of Fire ஆகிய புத்தகங்களும் இந்த பின்னணியிலேயே உருவாகின. ஆங்கிலத்தில் எழுதும் குறிப்பிடத்தக்க இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான அமிதவ் கோஷின் இந்தப் புத்தகம் மிக முக்கியமான சரித்திர ஆவணமாகும்.

Comments
Post a Comment