நீரோட்டப்பயணம்


" -
தெனமு ராணி தண்ணி சேந்தியெடுக்க அவியை வூட்டு கெணத்துக்கு போவா. அன்னைக்கு அதே மாறி போனாளா... போயி உள்ள எட்டிப்பாக்கையில ராசா குடுத்த அவ மூக்குத்தி களுண்டு உள்ள உளுந்திருச்சு..."
இந்த இடத்தில் தாத்தா கதையை நிறுத்தி விட்டு அமுக்கமான ஒரு சிரிப்பை தெறிக்க விடுவார். அதுவரை ஆர்வமாய் வாயை பிழிந்து கதை கேட்ட பொடிசுகளில் ஒன்று, ஆவல் அடக்க முடியாமல்,
"ம்... ம்... ?"என்று பரபரக்கும். அதற்கும் ஒரு நிதானமான சிரிப்பை உதிர்த்த தாத்தா,
"ம் ன்னா வந்துருமா ? "
"அட,... அப்பறோ? "
"அப்பறோன்னா வந்துருமா?!"
இந்த இடத்தில் இது வரை அவர் சொன்ன மத்த கதைகளை ஆர்வமாக கேட்டுக்கொண்டு வந்த கொஞ்சம் வளர்ந்த டிக்கட்டுகள் இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்றது என்று புரிந்து நழுவ ஆரம்பிக்குங்கள். ஆனால், இன்னும் விவரம் புரியாத ஏதோ குழந்தை மாத்திரம்,
"... என்ன தாத்தா ஆச்சு?" என்று சிணுங்கும் குரலில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடரும். ஆனால் அதற்கும் அவர், வேதாளம் போல,
"ஆச்சுன்னா வந்துருமா?!" என்று மரத்தில் ஏறிவிடுவார்...
இப்படியே இன்னும் சில கணங்கள் மாறிமாறி ஊசலாடியபின், ஆர்வம் மங்கிய குழந்தைகள்,
"போங்க தாத்தா , எப்பப்பாத்தாலு இதே வேலையா போச்சு..." என்று சலித்துக்கொண்டு விலகிப் போகத் தொடங்குங்கள்.




கதை சொல்லுவது என்பதும், கதைவழியே வாழ்வையும், தனிமனித சரித்திரங்களையும், சிந்தனைகளையும் பந்தி போட்டு இளைய தலைமுறைகளிடம் கடத்துவது என்பது உலகம் முழுவதுமே இருக்கும் வழக்கமாக இருந்தாலும், கொங்குப்பகுதிகளில் அதன் தனித்துவமான வட்டார மொழி, கதை சொல்லலில் ஒரு பெரும் உற்சாக ஊக்கி. பல வருடங்கள் கடந்து, பல நிலப்பரப்புகளைக் கடந்த பின்பும் அந்த கதைகள் சிலவேனும், மனதோடு ஒட்டிக்கொண்டு உறவாடுவதில் கதை சொன்ன தாத்தாவின் நெருக்கமான மொழி பெரும் பங்கு வகிக்கும்.
90களின் காலத்தில் தமிழ் சினிமாவில், ஆர் வி உதயகுமார், பி வாசு, கே ஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் கொங்கு பகுதியில் நடப்பதாக கதைகளை வாணலியில் கருகவைத்து பரிமாறியவகையில் கொங்கு மொழி என்ற பெயரில் செயற்கையாக ஒன்றை இந்தத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வலிய வடித்துக்கொட்டி, அதை ஏதோ ஒரு துரித உணவு வகைபோல் மாற்றிவைத்துள்ளனர்.
அப்படி செய்து அதன் இயற்கையான அழகு ஏதும் அதில் இல்லாமல், எதோ ஒரு செயற்கைத் தனத்தோடு உலவ விட்டுள்ளதோடு அதை ஒரு சாதி சமூகத்தோடு அடையாளப்படுத்தியுள்ளனர். அப்படிச்செய்ததன் மூலம், அதன் நுணுக்கமான அடுக்குகளும், அதன் சமூக அரசியல் முக்கியத்துவத்தையும் மழுங்கடித்துள்ளனர்.
அதன் முழு நளினத்தோடும் ஆழத்தோடும் வரும் இலக்கியங்கள் மிக முக்கியமானவை. அந்த வகையில் இந்த நொய்யல் என்ற பெரும்புதினத்தை ஒரு காவியமாகவே, மண்ணின் வாசம் தெளித்து அறுசுவை விருந்தாய் படையலிட்டிருக்கிறார் தேவிபாரதி!





திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் புதுவெங்கரையாம்பாளையம் என்பதை சொந்த ஊராகக் கொண்டுள்ள நல்லமுத்து மற்றும் முத்தம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த தேவிபாரதியின் இயற்பெயர் ராஜசேகரன்.






1980 ஆம் ஆண்டில் இருந்து பல தமிழ் இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் இவர் தமிழ் மாத இதழான காலச்சுவடின் பொறுப்பாசிரியராகப் ஏழாண்டு காலமாக பணிபுரிந்துள்ளார். பல்வேறு சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் நான்கு நாவல்கள் இதுவரை வெளிவந்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. இவருடைய "நீர்வழிப்படூஉம்" சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டில், எங்கள் ஊர் வெள்ளக்கோவிலில் நடைபெற்ற சாலை விபத்தில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு பேசமுடியாத நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள இவர், தற்போது மூன்று நாவல்களை எழுதி வருவதாகத் தெரிகிறது.
பொதுவாக நகரப்பகுதிகளில் பேசப்பட்டு கோவை மொழி என்று அடையாளப்படுத்தப்பட்ட அதன் நாகரிக வடிவத்துக்கும், Hearland அல்லது, அதன் உயிரான மையப்பகுதியில் பகுதிக்கு பகுதி, மெல்லிய வேறுபாடுகளுடன் வழங்கப்படும் மொழிக்கும் உள்ள வித்தியாசம், கோவையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே கைவருவதில்லை.
காலத்துக்குத் தகுந்த மாதிரி அதன் சொற்றொடர்கள் உருவாவதன் முக்கியத்துவமும் பல நேரங்களில் புரிவதில்லை. ஊரில் சிலநேரம் பெரிசுகள் நாயம் பேசிமுடித்தவடன், ஓரமாக நிற்கும் இளசுகளைப்பார்த்து, "படமுடிஞ்சு போச்சல்லோ, பொச்சு மண்ண தடியுட்டு போ சாமி..." என்பதில் உள்ள குத்தலையும் அதன் காரணத்தையும், டூரிங் டாக்கீசில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் வரை புரியவில்லை.
தோட்டம் காடுகளில் குடும்பத்தோடு நெருக்கமாய், தலைமுறைகளாக பணி செய்து, வாழ்ந்து வளர்ந்து வருபவர்களுக்கு கூழை, கோமாளி என்று பெயர்கள் இருப்பதன் பின்னணியில் உள்ள சாதிய அடக்குமுறை புரியும் போது இந்தக்கதையில் வரும் தொப்புளானுக்கும், காரிச்சிக்கும் பின்னால் உள்ள முக்கியத்துவம் புரியும்.
என்னதான் நகர் பகுதியில் வந்து பெயர்களை நாகரிகமாக வைத்திருந்தாலும், பேசும் வகையில் ஒரு கணத்தில் ஜெய்சங்கர்கள் தொப்புளானாகவும் கூழையாகவும் மாற்றிவிடுவதன் மையப்புள்ளி அதே கொங்கு மொழியில் ஒரு கூராயுதம்போல் மறைந்திருக்கும் நிலை சாமானியர்களுக்குப் புரிவதில்லை.
அந்த வகையில் இந்த புதினத்தில் மறைந்திருக்கும் கூராயுதம் கவனத்தோடு வாசிக்காவிடில் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது .
----
“சென்னி மூப்பனுமு அவுனுமு அப்பிடி அண்ணந் தம்பியாட்டத்தே இருப்பாங்கொ, ஆனா அவனுங்கோட அந்தப் பழத்த ஒரு துளி வாங்கித் தின்னாப்பல தெரீலீங்கொ எசமாங்களே, சோசியங் கேக்க வாற சனொ அவெ அத்தன பத்தியா சாமி கும்படறதப் பாத்துப்புட்டு ஒரு துளி தின்நீற வாங்கிப் பட்டும்படாமெ நெத்தீல வெச்சுக்கு, அதிலீஞ்செலபேரு கழத்துல மட்டுங் கொஞ்சொ இழுக்கிக்குவாங்கொ, கொமரெ சிருச்சுக்குவே, அவெஞ் சிரிக்கறது ஆருக்குந் தெரியாது, அந்த ஒதட்டுல ஒரு அடையாளமுந் தெரியாது, கண்ணுக்குள்ளதேஞ் சிரிப்பே. செரி, இவெ இத்தன பத்தியா கும்புட்டுக்குட்டிருக்கறானே இந்தச் சாமி எப்பிடித்தே இருக்குமுன்னு பாக்கலாமேன்னு ஒரு நா அவஞ்சாமி கும்புட்டுக்குட்டிருக்கறப்பொ அலுங்காம உள்ள போறெ, பாத்து எனக்கு மூச்சே நின்னு போச்சுங்கொ சாமியெசமாங்களே ராசாங்கமே, அப்பிடிக் கைலாசமாட்ட இருக்குது."
----
ஆரம்பத்தில் வரம்பு தாண்டிய பாலுறவுகள் ஏன் இவ்வளவு அதிகமாக கதையில் வருகிறது? ஏதோ பின்நவீனத்துவ காய்ச்சலாக இருக்குமோ என்று தோன்றினாலும் அதன் காரணம் கதையின் போக்கிலும் அதன் முடிவிலும் விரிந்து வரும்போது, அதன் கணமும் பிரமாண்டமும் புரிந்து பிரமிக்க வைக்கிறது. அத்தோடு ஒரு கதைசொல்லியாக தேவிபாரதியின் கதைநயம், நம்மை ஈர்த்து கட்டிவைக்கிறது. அத்தோடு, அவர் படைத்து உலவவைக்கும் மனிதர்களும் சம்பவங்களும் காலம் கடந்து, ஏதோவொரு சாயலோடு நம் நினைவுகளின் பக்கங்களையும் சேர்த்துப் புரட்டுவது என்பது என்னவொரு வாசிப்பு அனுபவம்!

Comments

Popular posts from this blog

கவனமும் புரிதலும்

The time of the Tiger

குரு பார்வை