ஒரு கோப்பைத் தேநீர் - பாகம் 2
தினமும் அதிகாலையில் டீக்கடைகள் பள்ளியெழுச்சி பாடுவது கோவையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தான். பசியோடு அதிகாலையிலேயே பணியை துவங்கும் துப்புரவுத்தொழிலாளிகள் முதல் பஸ் பிடித்து எட்டே காலுக்குள் வருகையை பஞ்ச்சடிக்க வேண்டும் என்று ஓடும் ஆலைத் தொழிலாளிவரை, சாமானியர்களின் பசிக்கும் வயிற்றுக்கு அமைதியளிக்கும் அருமருந்து, அந்த பத்து ருபாய் டீ தான்.
ஆரம்பகாலத்தில் எத்தனையோ முறை ஷாப் பிளோரில் சாப்பாட்டு நேரம் கடந்து பழுதான இயந்திரத்தோடு மல்லுக்கட்டி, சரிசெய்துவிட்டு பசியில் சுருசுருக்கும் வயிற்றோடு கீழே இறங்கிவந்தால், பக்கத்தில் இருந்த ஆப்ரேட்டர், "தம்பி , நீங்க பாட்டுக்கு மும்மறமா வேலைய பாத்துட்டு இருந்திங்க... டீ சப்ளை நேரமாச்சு, அதனால உங்களுக்கும் ஒரு டீ வாங்கிவச்சேன்.. இந்தாங்க" என்று நீட்டும்போது, அப்போது பொங்கி வரும் உணர்வை "ரொம்ப தேங்க்ஸு ங்கண்னா" என்ற இருவார்த்தைகளில் எல்லாம் அணை போட முடியாது.
அப்படி எல்லோருக்கும் சஞ்சீவனியாய் திகழும் தேனீரின் பழுப்புப்பக்கங்கள் ரத்தம் தோய்ந்து என்றால் நம்பமுடியுமா? அப்படித்தான் எனக்கும் இருந்தது.
சிறு வயதில் குன்னுரில் வளர்ந்த எனக்கு, தேயிலை தோட்ட்ங்கள் என்பவை பசுமை மணம் சூழ்ந்த அமைதியான அழகுப்பிரதேசங்கள். அதன் ஊடே போகும் பாதைகளின் நடுநடுவே எதிர்ப்படும் சிற்றோடைகளைக் கண்ட கண்களுக்கு, அதன் ரத்தத்தாரைகள் தெரிந்ததேயில்லை.
அதன் கொடுமைகளைப்பற்றி பிறகு வாசித்த சித்திரங்களால் வெகுகாலமாகவே வாசிக்கும் துணிவின்றி வாசிக்காமலே இந்த "எரியும் பனிக்காடுகள்" என்ற புத்தகம் என் அடுக்குகளில் உறங்கிக்கொண்டிருந்தது. சமீபத்தில் அமிதவ் கோஷின் "Smoke and Ashes: A Writer's Journey through Opium's Hidden Histories" என்ற அபின் பற்றிய புத்தகத்தை வாசிக்கும் போது, அதில் எப்படி தேயிலை, கொடுமையான அபின் பரவலாக்கத்துக்கும், விவசாயிகளின் அடிமை முறைக்கும் காரணமானது என்று அறிய நேர்ந்தது. அப்போது அதே வேகத்தில் இந்த புத்தகத்தையும் வாசிக்கும் துணிவும் வந்தது.
கருப்பன் மற்றும் வள்ளி என்னும் இரு தலித் கூலித்தொழிலாளிகளின் பார்வையில் விரியும் கதை, சில வரிகளில் அமிதவ் கோஷின் புத்தகத்தில் கடந்து போன ஆங்கிலேய முதலாளிகளின் சுரண்டலும் அடக்குமுறையும் இதில் ரத்தமும் சதையுமாக பார்க்கவைத்தது . அப்படிக் காணும்போது, மனதை உறைய வைத்தது. பலரும் நினைப்பதுபோல் இது வெறும் ஆங்கிலேய ஈஸ்ட் இந்திய கம்பெனியின் அடக்குமுறை பற்றியது மட்டும் அல்ல. இதை ஊன்றி வாசித்தால், எப்படி சாதிய அடக்குமுறையும், தீண்டாமையும், உழைப்பாளிகளைச் சுரண்டும் அமைப்புக்கு கங்காணிகளாக செயல்பட்டு, அப்பாவி தொழிலாளிகளை நசுக்க அடிப்படை பாதை அமைத்துக்கொடுத்தன என்பது புரியும். தங்கள் சாதியினரையே இடைநிலை சாதிகளின் அடக்குமுறையை காரணமாக காட்டி தந்திரமாக ஏமாற்றும் கங்காணிகள், அவர்களின் நம்பிக்கையை வைத்துச் சுரண்டும் பூசாரிகள், அவர்கள் படிப்பறிவற்ற தன்மையையும், சாதியையும் வைத்து சுரண்டும் வியாபாரிகள் என நீளும் அமைப்பும், அதன் மேலே அமர்ந்து அந்த அமைப்பின் கொடூரத்தை நிலை நிறுத்தும் ஆங்கிலேயர்களும் என அடுக்கடுக்காக சாதி தான் சுரண்டலுக்கு ஆதாரமாக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இதை எழுதிய Dr. Paul Harris Daniel, நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள நெய்யூர் என்னும் ஊரில் பிறந்தவர். 1941 Madras medical collegeல் படடம்பெற்று எனக்குப் பரிச்சயமான ஆனமலை பெரியகாரமலை எஸ்டேட்டில் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்தார் . அப்போது அவர் கண்ட தொழிலாளிகளின் நிலையை அவர் "Red Tea " மற்றும் "Kaliyugam" என்ற பெயரில் இரு புத்தகங்களாக படைத்தார். அதில் இரண்டாவது புத்தகம் பற்றி எதுவும் சிக்கவில்லை.
முதல் புத்தகமான Red Tea, "எரியும் பனிக்காடுகள்" என்ற பெயரில் இரா.முருகவேள் மொழிபெயர்த்து வெளிவந்திருக்கிறது. முருகவேள், அவரே ஒரு படைப்பாளி. இருந்தபோதும் அவர் மொழிபெயர்ப்பில், அதீத உணர்வுப் பூச்சு ஏதுமில்லாமல் ஒரு தொழிலாளியின் பார்வையில் இயல்பான மொழியில் வெளிவந்திருக்கிறது. அது மிகத் தெளிவாக முனைந்து செய்தது என நினைக்கிறேன். மிகவும் subtle underplay பண்ணியிருக்கிறார். ஏனெனில் இந்த கனமான படைப்பின் மொழிபெயர்ப்புக்கு வார்த்தைகளில் அதீத உணர்வு இல்லாது இருப்பதும் நல்லதுதான். இல்லை என்றால், பொங்கும் உணர்வுகளால் வாசித்து முடிக்க முடியாமலே போயிருக்கும்.
இன்று எஸ்டேட்டுகளுக்கு சுற்றுலா செல்பவர்களும், அதன் பழம் பங்களா ரெசார்ட்டுகளில் தங்கி சமூக வலைத்தளங்களில் அதைப்பற்றி சிலாகித்து எழுதுபவர்களும், அதன் கருமையான பக்கங்களை பற்றி அறிந்துகொள்ள இந்த புத்தகத்தை ஒரு முறையேனும் வாசித்துவிடவேண்டும். அதுவே அதன் வேர்களில் உறைந்திருக்கும் தொழிலாளிகளின் கண்ணீருக்கு சற்றேனும் கதகதப்பை அளிக்கக்கூடும்.




பி . கு . : அவர் எழுதிய "DOCTOR'S TALES" என்ற குழந்தைகளுக்கான 1972ல் Childrens Book Trust 1972ல் வெளிவந்த தொகுப்பு கண்ணில் பட்டது - இணைப்பில்.
ReplyDeletehttps://archive.org/details/DOCTORSTALES/page/n1/mode/1up