Aliyah என்னும் பெரும் பயணம்.

ஒவ்வொரு முறை மனித இடப்பெயர்வு நிகழும் போதும், மனித இனம் தனது சரித்திரத்தில் ஒரு பக்கத்தை புதிதாக எழுதுகிறது. ஒரு இனம் அல்லது கூட்டம் இடம் பெயர்ந்தது என்று குறிப்பிடும்போது, பொதுவாக கடந்துவிடும் சரித்திரம், அந்தக் கூட்டத்தில் உள்ள தனி மனிதர்களின் மன ஊசலாட்டங்கள், கலக்கங்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை பெரிதும் பொருட்படுத்துவதில்லை.


ஆனால், எந்த ஒரு இடப்பெயர்வும் அது போன்ற தனி மனிதர்களின் மனவோட்டங்களின் வெளிப்பாடுகளையும், அதன் வழியே நிகழும் பல்வேறு நகர்வுகளையும் கடந்தே செல்கின்றது. அப்படிச் செல்லும் தடங்களை பதிவு செய்யும் இலக்கியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கேவலம், ஒரு வீடு மாறும் நிகழ்வே சிலநேரம் உணர்ச்சிப்பெருக்கின் ஆதாரமாக உருவெடுக்கும்போது, தலைமுறை தலைமுறையாக வேர்விட்ட உறவுகளை, அறுத்துப் போகும் பெரும் சமூக இடப்பெயர்வு என்பது எவ்வளவு ஆழமான தடங்களை விட்டுச்செல்லும்?





யூதர்களின் வாழ்வே அப்படிப்பட்ட ஓயாத அலைக்கழிப்புகளாலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இடப்பெயர்வுகளாலும் நிறைந்திருப்பது வரலாற்றின் பக்கங்களை புரட்டியவர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு முன்பே பைபிளின் The Book of Exodus என்ற பகுதி யூதர்களின் இடப்பெயர்வுகளை தொன்றுதொட்டுப் பேசுகிறது. அது Exodus என்ற இடப்பெயர்வைக்குறிக்கும் வார்த்தையை யூதர்கள் சம்பந்தப்பட்ட கலாச்சார குறியீடாகவே ஆக்கியது. மேலும் அதைப்பற்றிய பலப்பல படைப்புகள், குறிப்பாக மேலை நாட்டின் யூதர்களின் வாழ்வைப்பற்றிய இலக்கியங்கள், இரண்டாம் உலக யுத்த இனவழிப்பின் பின் ஆங்கிலத்திலும், வேறு பல மொழிகளிலும் பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக Leon Uris 1958 எழுதிய Exodus என்ற புத்தகம், புதினம் என்ற வரையறையைத் தாண்டி, வரலாற்றை தழுவிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது. தற்காலத்தில் இஸ்ரேலிய செயல்பாடுளை கண்டு அது ஒரு ஜயனிஸ்டுகளின் பிரச்சாரம் என்று குற்றம் சாட்டப்படுவதும் உண்மைதான். அதை நான் வாசித்தகாலத்தில் அதில் உள்ள பிரச்சார நெடி உரைக்கவில்லை. இன்றைக்கு அப்படி என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை.





ஆனால் , அப்படி சர்ச்சைக்குரிய சரித்திரத்தில் இருந்து மாறுபட்ட ஒன்று, கேரளத்தின் யூத குடியேற்றமும், இந்திய சுத்தந்திர காலத்துக்கும் பின்னான அவர்களின் இடப்பெயர்வும். உண்மையில் யூதர்களின் தொடர்பும் வருகையும் கேரளத்தில் கடல் வணிகத்தின் தொடர்ச்சியாக மிக இயல்பாகவே நடந்த ஒன்று.

கொச்சியின் மட்டஞ்சேரியின் யூதக் குடியிருப்பை இன்று சுற்றுலாப் பயணிகளாக காணும் வெளிமாநிலத்தவர்களுக்கு அது ஒரு அதிசயம். ஆனால், அவர்களுக்கு முன்பே கரிய மலபாரி யூதர்கள் வந்து தென் கேரளத்தின் பல இடங்களில் இருந்தனர் என்பது அதிகம் குறிப்பிடப்படாத ஒன்று. மேலும் பின்னால் வந்த வெள்ளையான மட்டஞ்சேரி யூதர்கள், கருப்பு யூதர்கள் என்று அவர்களுக்கு முன்பே இருந்த மலபாரி யூதர்களை தள்ளியே வைத்திருந்தனர் என்பது அதிகம் பேசப்படாததாகும். சேரமான் பெருமாள் ( எந்த சேரமான் என்பது பலத்த வரலாற்று கேள்வியாய் இன்னும் இருக்கிறது) காலத்தில், அரசரின் ஆதரவோடு தங்கள் வீடுகளையும், தெருக்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அவர்கள் அமைத்துக்கொண்டனர். ஆனால், அதற்கு முன்பே அவர்களை பூர்வகுடிகள் ஏற்று அங்கு வாழ்ந்துதான் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்பே அவர்களுக்குக் கிடைத்த அரசின் அங்கீகாரம் அவர்களை கேரளத்தின் ஒரு சமூகமாக இணைந்துகொள்ள வழிவகுத்தது.

இருந்தபோதும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான இஸ்ரேலின் தோற்றமும் அதன் பின்னான பெரும் இடப்பெயர்வும் கால காலமாக வாழ்ந்து, கேரளத்தின் சமூக இழையாக ஒன்றிய மலபாரி யூதர்களின் மீது ஏற்படுத்திய அழுத்தமும், அதன் தொடர்ச்சியாக அவர்கள் நடத்திய இடப்பெயர்வும், கேரளத்தின் மற்ற சமூகங்களின் அழுத்தம் இல்லாமல், உலகம் முழுதும் இருந்த யூத ஜயனிஸ்ட் இயக்க அழுத்தத்தால் நிகழ்ந்தது.

அதை மிக அழகாக சேதுமாதவன் தனது Aliyah என்ற புத்தகத்தில் படைத்துக்காட்டியிருக்கிறார். Solomon என்னும் ஒரு மலபாரி யுத்த இளைஞன் வழியே, அவன் இடம்பெற்ற அக்கால சமூகத்தையும், இடப்பெயர்வு அவன் குடும்பத்துக்குள் நிகழ்த்திய முரண்களை மிக விரிவாக காட்டியிருக்கிறார். இந்தியாவின் முதல் இடதுசாரி அரசாங்கம், அதன் குறை நிறை மற்றும் அதன் மீது காங்கிரஸ் அரசின் முதல் ஜனநாயகப் படுகொலை என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
மேலும் Aliyah என்ற வார்த்தையே ஒரு குறியீடுதான் என எண்ணத்தோன்றுகிறது. அது யூதர்களின் இடப்பெயர்வை மட்டும் குறிக்கவில்லை . மாறாக மனத்தையும் மதத்தையும் கடப்பதையும் கூட என்று தோன்றுகிறது.

மிக அருமையான குறியீடுகளையும், காட்சிகளையும் கொண்ட இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசித்தது சற்று நிரடலாகத்தான் இருந்ததது. வாசிக்கும் போதே, மலையாளத்த்தின் வரிகள் என் காதோடு உரசிச்சென்றன. எடா சாலமோனே, இலியாஸே, என முத்திமாவின் குரல் என் காதுகளை கடந்து நெஞ்சில் நுழைந்தது. மலையாளத்துக்கு நெருக்கமான தமிழில் வாசித்திருந்தால், கொச்சியின் கடல் காற்றும், அந்திநேர ஆற்றின் படகும் எனக்கு இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும் என்று மனம் அடித்துக்கொண்டது. தமிழில் வாசித்திருந்தால் சேதுமாதவனின் காட்சியமைப்பும் அதன் உயிரோட்டமும் இன்னும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என்ற ஏக்கம் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை. யாரும் அதைச்செய்தால் மறுவாசிப்பு ஒரு பேரனுபவமாகும்.



Comments

Popular posts from this blog

கவனமும் புரிதலும்

குரு பார்வை

நீதிக்கட்சி அரசும் அது சந்தித்த மருத்துவக் கல்வி சவால்களும்