கோடைக்குப் பின்னான குளிர்...

 எல்லாம் ஓஸ்லோவின் ஒரு மழைநாளில் துவங்கியது. ஒரு சிறிய புத்தக அங்காடியைப் பற்றிய பரிந்துரை என்னை வழிதேடி ஓட வைத்தது. அங்கே இருந்த சிப்பந்தி காட்டிய, தேர்ந்த மொழிபெயர்க்கப்பட்ட நோர்வேஜிய படைப்புகள் கொண்ட சிறிய அடுக்கில் இருந்து இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். பக்கங்களைப் புரட்டியதும், வரிகள் வந்து மனதோடு ஒட்டிக்கொண்டன.






உண்மையில் எதுவுமே ஒரு நாளில், ஒரு பொழுதில் துவங்குவதில்லை. முந்தைய பொழுதுகளின் நிகழ்வுகள், நிழல்களாக நீள்கிறது. பின் அதுவே மனதில் தொக்கி ஒரு கேள்விக்குறியாய் பிரமாண்டமாக உருப்பெறும்போதுதான் திடீர் என அதன் இருப்பு ஒரு நாள் வந்து உறுத்தத்துவங்குகிறது. உறவுகளுக்கிடையே எழும் நம்பிக்கைகள், உடைந்து போகும் போது வரும் வலி மனதிற்குள் நீங்காத ரீங்காரமாக இருந்து, அழுத்தம் தரும். அந்த நேரத்தில் அதை ஜீரணித்துக்கொண்டாலும், பிறகு பலநேரங்களில் நாம் தேடுவதெல்லாம் அதற்கான நியாயம் அல்ல. ஆங்கிலத்தை சொல்லும் closure என்னும் வெறும் முடிவுதான். ஆனால், அதுவும் கூட அரிதாகத்தான் சிலருக்குக் கிட்டுகிறது. அப்படி ஒரு சிக்கலைத்தான் "Out Stealing Horses" என்ற இந்தப் புதினம் பேசுகிறது.





இதை எழுதிய பேர் பேட்டர்சன் (Per Petterson) ஒரு நோர்வேஜிய எழுத்தாளர். நட் ஹாம்சன், மற்றும் ரேமண்ட் கார்வர் ஆகியோரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு, நூலகர், புத்தகக் கடை பணியாளர், எனப் பிழைப்புக்காக பல வேலை செய்த இவர், இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் என்று உருமாறி எழுத்தாளரானவர். இவர் எழுதிய புத்தகங்கள் இன்றைய நோர்வேஜிய இலக்கியப்பரப்பில் மிக முக்கிய இடம் பெறுகின்றன.








அவர் நோர்வேஜிய மொழியில் "Ut og stjæle hester" என எழுதிய இந்த புத்தகம், அது வெளிவந்த 2003ம் வருடம், நோர்வேஜிய இலக்கியப் பரப்பில் இரு வேறு முக்கிய விருதுகளை வென்றது. அதைத் தொடர்ந்து, 2005 வருடம் வெளிவந்த இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு, 2006ம் வருடத்திய "Independent Foreign Fiction Prize" மற்றும் 2007ம் வருட "International Dublin Literary Award" இரண்டையும் வென்றதோடல்லாமல் New York Times Book Review வின் அந்த வருடத்தின் முக்கிய 10 புத்தக பட்டியலிலும் இடம் பெற்றது.
மனைவியின் அகால மரணத்துக்குப் பின், தன் வாழ்வின் அந்திம காலத்தில், தன் மகன்களையும் , மகள்களையும் விட்டு விலகி நோர்வேயின், ஒரு தனிமையான மலைக்காட்டில், ஒரு சிறு வீட்டில் வந்து குடியேறுகிறான் ட்ராண்ட் (Trond Tobias Sander). மனதில் இருந்த உறவுகளின் மேலான நம்பிக்கையின்மை, ஓட்டுதல் இல்லாமை எல்லாம் அவனுடைய சிறுவயதில் நிகழ்வுகளில் பொதிந்து இருக்கிறது. குறிப்பாக அவன் மிகவும் நேசித்த அவன் தந்தையின் செயலால் அது வடிவமைக்கப்படுகிறது.
பொதுவாக childhood trauma என்பது வளர் பருவத்தில் குழந்தைகளுக்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோர்களாலேயே நிகழ்கிறது. பலநேரங்களில் அந்த நிலை புரியாமலேயே கேள்விகளோடு வாழ்பவர் பலர்.
இரு வேறு காலங்களில் மாறி மாறி பயணிக்கும் கதை, துவக்கத்தில் ஒரு இருளான வெண்பனி காலத்தில், வயதான ட்ராண்டின் தனிமையான வாழ்வில் துவங்குகிறது. பிறகு, கடந்த கால சிறுவயது நினைவுகள் முழுதும் வசந்த காலத்திலும், பெரும் பாலும் வெய்யில் காலத்திலும் நடைபெறுவதாக காட்டப்படுவது கூட ஒரு வகைக் குறியீடுதான்.
அவன் சிறு வயது வாழ்வைப்ப் புரிந்து கொள்ள இரண்டாம் உலக யுத்த காலத்திலான சுவீடன் மற்றும் நோர்வே பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஸ்காண்டிநேவியாவைப் பொறுத்தமட்டில், சுவீடன் வெளிப்படையாக அணிசேராத கொள்கை எடுத்து இரு தரப்புக்கும் உதவிசெய்து தன்னை தக்க வைத்துக்கொண்டது. அதனோடு ஒப்பிட்டால் நோர்வே, ஜெர்மானியின் நேரடி ஆக்கிரமிப்பில் இருந்தது. இருந்தபோதும் அங்கிருந்த கலகக்காரர்கள் மிக உயிர்ப்புடன் செயல்பட்டனர். அதற்கு சுவீடன் அண்மையும், நெருக்கமும் பாதுகாப்பாக அமைந்தது. அப்படி செயல்பட்ட கலகக்காரர்கள் அடிக்கடி சுவீடனுக்குள் தலைமறைவாகிவிடுவது வழக்கமானது. அப்படி அவர்கள் துடிப்புடன் செயல்பட்டு நாட்டின் ஜெர்மானிய எதிர்ப்பையும் ஜெர்மனிக்கு எதிரான நேசநாட்டுப் படைகளின் செயல்பாடுகளையும், உயிர்ப்புடன் வைத்திருந்தாலும், அந்தத் தொடர் பிரிவினால் ஏற்பட்ட உறவுச் சிக்கல்களால் பல குடும்பங்கள், போருக்குப் பின் உடைந்து போயின.
அந்தக் காலத்தில் தன் தந்தையை ஆதர்சமாக பார்த்த சிறுவன் ட்ராண்ட், தன் உயிர் நண்பனையும் , பிறகு தன் தந்தையையும் பிரிந்து போவது, பொறுக்குப்பின்னான் அந்த விளைவினால்தான். ஒரு மழை நாளில் நிகழ்ந்த ஒரு துயரத்தினால், டராண்டுக்கு எதனாலே என்று தெரியாமலே அவன் நண்பன் யான் பிரிந்து போகிறான்.
''Christ,' I said. 'It's weird that something so little can come alive and just fly away’, and maybe it was not that well put and certainly far less than the rushing, airy feeling I felt inside me. But something happened at that moment that I had no way of understanding, for when I raised my eyes and looked up at Jon's face it was strained and totally white. Whether it was the few words I had uttered, or the egg he was holding, I shall never know, but something made him change so suddenly, and he looked me straight in the eye as if he had never seen me before, and for once he did not squint, and his pupils were big and black. And then he opened his hand and dropped the egg. It fell along the trunk, and I followed it with my eyes and saw it hit one of the branches further down and break and dissolve into little pale fragments that swirled around on all sides, and they fell like snowflakes, almost weightless, and gently drifted away.'
அதன் பிறகு , நிகழ்வுகளை அசைபோடும் ட்ராண்ட் நிகழ்வுகளை எடைபோட்டு எழுப்பும் கேள்வி, வாழ்வைப்பற்றி மட்டும் இல்லாமல் பிறகு உறவுகளின் மீதான அவன் பார்வையையும் குறிக்கின்றது.
'I thought about how it must feel to lose your life so early. Lose your life, as if you held an egg in your hand, and then dropped it, and it fell to the ground and broke, and I knew it could not feel like anything at all. If you were dead, you were dead, but in the fraction of a second just before; whether you realised then it was the end, and what that felt like. There was a narrow opening there, like a door barely ajar, that I pushed towards, because I wanted to get in, and there was a golden light in that crack that came from the sunlight on my eyelids, and then suddenly I slipped inside, and I was certainly there for a little flash, and it did not frighten me at all, just made me sad and astonished at how quiet everything was.'
நினைவுகள் அவன் அடைக்கலமாகிறது. அத்தோடு அவன் உணர்வுகளும் நம்மீது அலையடிக்கிறது .
"someone says the past is a foreign country, that they do things differently there, then I have probably felt that way for most of my life because I have been obliged to, but I am not any more. If I just concentrate I can walk into memory's store and find the right shelf with the right film and disappear into it and still feel in my body"
அந்தக் கோடையின் இறுதியில் அவன் தந்தை உடைத்த அவன் நம்பிக்கையின் அதிர்ச்சியை அவன் தாயோடு சேர்ந்து ஜீரணித்துக்கொள்ளும் சிறுவயது டிராண்ட், கொடும் பனிக்காலத்தில் தன் நண்பனின் தம்பியை கண்டு ஏதோ ஒருவகையில் சமரசம் செய்து கொள்கிறான். இதில் வயதான டிராண்ட் தேடுவது எது என்ற கேள்விக்கு நமக்கு ஒரு முடிவு கிட்டாதது குறிப்பால் மனித உறவுகளுக்கு இடையேயான சிக்கல்களின் நிலையாகவே புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தபோதும், ட்ராண்டின் தந்தை மற்றும் டிராண்ட் ஆகிய இரு தந்தைகளை காணும் போது, ஒப்பீட்ளவில் டராண்ட் சிறப்பாகவே இருப்பதாக காண்பதும் குறியீடுதான்.
அதன் நுண்ணிய உட்பொதிந்த அர்த்தங்களுக்காகவும், அழகிய படிமங்களுக்காகவும், மிக மெதுவாக ஆழ்ந்து வாசிக்க வேண்டியது இந்த புத்தகம்.
பின் குறிப்பு :
இந்தக்கதை திரைப்படமாக 2019ல் Hans Petter Moland இயக்கி வெளிவந்தது. அந்த வருடம் பெர்லினில் நடந்த 69வது உலக திரைப்பட விழாவில், தலைசிறந்த கலைப் பங்களிப்புக்கான வெள்ளிக் கரடி ( Silver bear ) விருதை வென்றது. அதன் ட்ரெயலருக்கான இணைப்பை தவறாமல் பாருங்கள். கண்டிப்பாக பிடிக்கும்.

Comments

Popular posts from this blog

நீரோட்டப்பயணம்

கவனமும் புரிதலும்

குரு பார்வை